தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், கட்சியினர் நினைவிடம் வரை பேரணி நடத்த போலீஸ் அனுமதி மறுத்ததால் சிறிது நேரம் சாலையில் மறியலில் ஈடுபட்ட தொண்டர்கள் தடையை மீறிச் சென்றனர்.
விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏராளமான தொண்டர்கள் கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய தலைமையகத்தில் இருந்து நினைவிடம் வரை பேரணியாக செல்ல முடிவு செய்தனர். ஆனால் போக்குவரத்து பாதிப்பை காரணம் காட்டி அனுமதியில்லை என காவல்துறை கூறியதால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து விஜயகாந்தின் மனைவியும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரேமலதா தலைமையில் தொண்டர்கள் பேரணி செல்ல முயன்றனர். காவல்துறை தடுத்ததால் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், தடுப்புகளை மீறி பேரணியாகச் சென்றார்.
இதையடுத்து காவல்துறை அனுமதியை மீறி சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு பேரணியாகச் சென்ற தே.மு.தி.க தொண்டர்கள் விஜயகாந்திற்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.