விசித்திர தண்டனை

9 hours ago 5

பழனி மலை அடிவாரம்! பெரும் குளம் ஒன்றின் கரையில் ஏராளமான மீன்கள் குவிக்கப்பட்டு, ஒரு சிறு குன்றுபோலக் காட்சியளித்தது. குளத்தில் பிடிக்கப்பட்ட மீன்கள் அவை.
அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் குளத்தில் உள்ள மீன்களைப் பிடித்து கரையில் குவிப்பார்கள். மறுநாள் அவற்றைப் பங்கிடுவார்கள். குவிக்கப்பட்டிருக்கும் மீனுக்குக் காவலாகப் பழனித்தேவர் என்பவர் காவலாக நியமிக்கப் பட்டிருந்தார். பெயர் அறியமுடியாத உத்தம அடியார்களில் பழனித் தேவரும் ஒருவர்.

அதிகாலையில் எழுவது, நீராடுவது, திருநீறு – ருத்திராட்சம் அணிந்து, பழனியாண்டவனைத் தியானித்து அடி வாரத்தில் இருந்தபடியே நிமிர்ந்து மலையைப் பார்த்து, ‘‘அப்பா! பழனித்தேவா!’’ என்று குரல் கொடுப்பார்; பிறகு தொண்டு தொண்டு தொண்டுதான். அவருடைய பெயர் தெரியாததால், அவர் சொன்ன ‘பழனித்தேவா’ என்பதையே அவருக்குப் பெயராகச் சூட்டி அழைத்தார்கள்.

அப்படிப்பட்ட பழனித்தேவர் இரவில், மீன் குவியலைக் காவல்காத்துக் கொண்டிருந்தார். அதே வேளையில் பழனியில் இருந்த மீனவர் குடும்பத்தில் ஒன்றில் இருந்த பெண்மணி ஒருவர் தன் குடிசையில், ‘‘யப்பா! பழனியாண்டவா! என் வீட்டுக்காரர் இருந்திருந்தால், எங்கள் வீட்டிற்கும் ஒரு கூடை மீன் கிடைத்திருக்கும். என் ஏழ்மையும் கொஞ்சமாவது நீங்கியிருக்கும். என்ன செய்ய? வீட்டுக்காரரும் போய்விட்டார்.

என் குறையை வேறு யாரிடம் சொல்ல?’’ என்று தன் குடிசையில் மாட்டியிருந்த முருகன் படத்தின் முன்னால் இருந்து புலம்பிக் கொண்டிருந்தார். அடியவர் இச்சையில் எவையெவை உற்றன; அவை தருவித்தருள் பெருமாளே! – என்ற அருணகிரிநாதரின் வாக்கிற்கு இணங்க, அப்பெண்ணின் குறைதீர்க்கத் தீர்மானித்தார் முருகப் பெருமான். நள்ளிரவு நேரம்; இருட்டின் ஆக்கிரமிப்பும் சுற்றியிருந்த மரங்களின் காற்று ஓசையும் மலையைச் சுற்றியிருந்த விலங்குகள் சிலவற்றின் கத்தும் ஓசையும், அந்தப் பகுதியை மேலும் அச்சத்தில் ஆழ்த்தின. ஆனால் எதைப் பற்றியும் பொருட்படுத்தாத பழனித்தேவர், கண்ணும் கருத்துமாக முருகன் திருநாமங்களைச் சொன்னபடி, தன் காவலைச் செய்து வந்தார். கள்வர்கள் மட்டுமல்ல; தூக்கம்கூட அவரை நெருங்கவில்லை.

அப்போது கண்ணைக் கவரும்படியான, உருண்டு திரண்ட பதினாறு வயது உருவம் ஒன்று அடிமேல் அடி வைத்து, மீன் குவியலை நெருங்கியது. பரமனருளால் பழனித்தேவரும் ஒருசில விநாடிகள் கண் அயர்ந்தார். அதற்காகவே காத்திருந்ததைப் போல, பதுங்கிப்பதுங்கி வந்த உருவம் தன் கையிலிருந்த கூடையில் பரபரப்போடு மீன்களை வாரி நிரப்பியது; அதன்பிறகு அங்கிருந்து மெள்…ள நழுவி ஓடத் தொடங்கியது.

அதற்குள் கண் விழித்த பழனித்தேவர், ஒரு கூடை நிறைய மீன்களுடன் ஓர் உருவம் ஓடுவதைப் பார்த்தார்; பதறினார்; ‘‘ஏய்! யார் நீ? நில்! நில்!’’ என்று கத்தியபடியே கையிலிருந்த தடியுடன் துரத்தினார்; பிடிக்க முடியவில்லை; கோபம் தாங்காமல் கையில் இருந்த தடியை ஓங்கிப் பலமாக வீசினார். அது உருவத்தைத் தாக்கியது. அதே விநாடியில் அந்த உருவம் மறைந்தது.

‘‘என்னைத் தெரிய வில்லையா? நாள்தோறும் நீ வழிபடும் பழனியப்பனடா நான்!’’ என அசரீரி மட்டும் கேட்டது. பழனித்தேவருக்கு உடம்பு ஆடியது;
உள்ளம் கலங்கியது; ‘‘முருகா! பழனியப்பா! வந்தது நீயா?’’ என வீறிட்டுக் கதறி மூர்ச்சையாகிக் கீழே விழுந்தார். மீன் கூடையுடன் ஓடிய பழனியாண்டவன் அதை, பங்கு பெற முடியாமல் புலம்பிய பெண்ணின் குடிசை வாசலில் வைத்து விட்டு, ‘‘பெண்ணே! உன் பங்கு மீன் இதோ!’’ என்று கூவினார். குரல் கேட்டு வெளியில்வந்து பார்த்த பெண், ஒரு கூடை நிறைய மீன்களைக் கண்டு மனம் மகிழ்ந்து,

‘‘யாரப்பா நீ?’’ என்றாள். பழனியாண்டவர் சிரித்தார்; ‘‘நன்றாக இருக்கிறது நீ பேசுவது! என்னைக்கூவி அழைத்து உன் எண்ணத்தை நிறை வேற்றுமாறு வேண்டுகிறாய். அதை நிறைவேற்ற வந்தால், நீ யாரப்பா என்கிறாய். உனக்கு இன்னும் என்னைத் தெரிய வில்லையா?’’ என்று சொல்லிவிட்டு, அப்படியே மறைந்தார். பார்த்துக் கொண்டிருந்த பெண் அதிர்ச்சி அடைந்தாள்;
‘‘அப்பனே! பழனியாண்டி! ஏழை எனக்காக வந்தாயா? முனிவர்களும் ஞானிகளும் துதித்துத் தேடும் நீ, எனக்காக மீன்கூடையைச் சுமந்து வந்தாயே! என்ன பாவம் செய்து விட்டேன் நான்! அதைக்கொடு! இதைக்கொடு! என்று கேட்டு உன்னை, வேலை வாங்கி விட்டேனே! முருகா! இப்போதே புறப்படுகிறேன்.

உன் சந்நதி வந்து, நான் வேலை செய்தால்தான் என் பாவம் தீரும்; பிறவி ஈடேறும்’’ எனச் சொல்லிவிட்டு, ‘விடுவிடு’வென்று மலை ஏறத் தொடங்கினாள். அந்த ஏழைப் பெண் மலை உச்சியை அடைந்த நேரம் – அதிகாலை நேரம். பழனியாண்டவன் சந்நதியில் ஏராளமான பக்தர்கள் விஸ்வரூப தரிசனத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்குபோன ஏழைப்பெண், ‘‘அரோகரா! பால தண்டாயுதபாணிக்கு அரோகரா!’’ என்று வீறிட்டுக் கூவினாள். அதைக் கேட்டுப் பக்தர்கள் எல்லாம் மெய்சிலிர்த்து, அவளைப் பார்த்தார்கள்.

‘‘பழனியாண்டவா! பாவி நான் நேர்மையில்லாதவள். நற்கதி கிடைக்குமா எனக்கு?’’ எனப் புலம்பினாள் ஏழைப்பெண். அப்போது சந்நதியில் பூஜை செய்து கொண்டிருந்த அர்ச்சகருக்கு அருள் வந்தது. ‘‘ஹும்! ஹும்…’’ என ஆடிய அவர், ‘‘என்ன இது? அறிவு தோன்றிய நாள் முதல் என்னை வழிபட்ட புண்ணியவதி நீ! என்ன வேண்டும் உனக்கு?’’ என்றார். ஏழைப் பெண் பதில் சொன்னாள்; ‘‘முருகா! பாவியான என்னையும் உன் வாக்கால், புண்ணியவதி என்றாயே! அருள் தெய்வமான உன் மலைமேல், என்றும் நான் பணி செய்ய வேண்டும். அருள்செய்!’’ என்று தன் உள்ளத்தை வெளிப்படுத்தினாள்.

‘‘அப்படியே ஆகும்!’’ என்று சொல்லி, அர்ச்சகர் உடலில் இருந்து மலை ஏறினார். அதே நேரத்தில் அடிவாரத்தில் மயங்கிக் கிடந்த பழனித்தேவர் மயக்கம் தெளிந்து எழுந்தார்.
நடந்தவைகளை எண்ணித் துடித்தார்.‘‘ஆ! ஐயோ! என்ன அக்கிரமம் இது? தண்டாயுதபாணியைப் போய்த் தடி கொண்டு அடித்தேனே. பழனியாண்டவனை அடிக்குமளவிற்குப் பாவக்கோட்டையாகி விட்டேன்.கும்பிட வேண்டிய கைகள் அவனை அடித்தன; வலம்வர வேண்டிய கால்கள் அவனைத் துரத்தின; துதிக்க வேண்டிய நாக்கு தூற்றியது; கனிவோடு பார்க்க வேண்டிய கணகள், கனல் பொங்கச்சீறின அமைதியாய் இருக்க வேண்டிய மனம், ஆத்திரம் கொண்டது.

‘‘இவ்வளவு பாவங்களைச்செய்த நான், இனி உயிரோடு இருப்பது முறையல்லவே. பாவம் செய்த என் அங்கங்களை ஒவ்வொன்றாக அறுத்துப் பழனியாண்டவனின் பலி பீடத்தில் சமர்ப்பணம் செய்ய வேண்டும். இந்நேரம் அவன் சந்நதியில் ஏராளமான பக்தர்கள் இருப்பார்கள். நம் எண்ணம் நிறைவேறாது. எல்லோரும் மலையிலிருந்து இறங்கி வந்தபின் இன்று இரவே, என் அங்கங்களை அறுத்து ஆறுமுகனுக்குக் காணிக்கை ஆக்குவேன்’’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்ட பழனித்தேவர், வீடு போய்ச் சேர்ந்தார்.

உறையிலிருந்த வாளை உருவி சாணை பிடிக்கத் தொடங்கினார். அப்போது காலை மணி பத்து. பழனித் தேவரிடமும் ஏழைப் பெண்ணிடமும் தன் திருவிளையாடலைக் காட்டிய பழனியாண்டவன், அந்த இரவிலேயே நடத்திக்காட்டிய மற்றொரு திருவிளையாடலையும் பார்க்கலாம்! அந்த நாட்டை ஆளும் அரசர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்.

அவர் கனவில் போய் நின்றார் கந்தப் பெருமான். நடந்தவற்றை எல்லாம் சொன்னார். மன்னர் துடித்தார்; ‘‘தெய்வமே! பலகாலம் தேடினாலும் பார்க்கக் கிடைக்காத உன்னைப் பழனித்
தேவர் அடித்தாரா? வான் சுமந்த தேவர்களைக் காப்பாற்றிய நீ, மீன் கூடையைச் சுமந்தாயா? என்ன சோதனை இது?’’ எனக் கலங்கினார். பழனியாண்டவன் பதில் சொன்னார்;
‘‘மன்னா! கலங்காதே! பழனித்தேவனுக்கு ஈடு இணை கிடையாது. ஏழைக்கு உதவுவது என் கடமை. தடியால் அடித்தது, காவல்காத்த பழனித்தேவன் கடமை. என் தந்தையான சிவபெருமான் கல்லாலும் வில்லாலும் அடிபட வில்லையா? வருந்தாதே நீ!

‘‘பக்தனான பழனித்தேவனின் பெருமையை, உலகறியச் செய்யப்போகிறேன் நான். என்னை அடித்ததை உணர்ந்த பழனித் தேவன், இன்றிரவு தன் உடல் பகுதிகளை அறுத்து, தனக்குத் தானே தண்டனை அளித்துக் கொள்ளப் போகிறான். நிறுத்த வேண்டும் அதை. கண்ணும் கருத்துமாகக் காவல்காத்த அவன் கைகளுக்குக் கனகக் கடகம் அல்லவா அணிவிக்க வேண்டும்! அதைச் செய் நீ எனக்காக!’’ என்று அறிவுறுத்திய முருகப் பெருமான், மன்னரின் கனவிலிருந்து மறைந்தார்.

கனவு கலைந்த மன்னர், ‘‘பழனித் தேவருக்காகப் பழனி ஆண்டவன் என் கனவில் வந்து அருள்புரிந்தாரோ! ஆச்சரியம்!’’ என்று வாய்விட்டுச் சொல்லி, உடனே பொற்கொல்லர்களை அழைத்து, உத்தரவிட்டார். பொழுது விடிவதற்குள் இரண்டுதங்கக் கடகங்கள் தயாராயின. பழனித்தேவர் தன் வீட்டில், எண்ணாதது எல்லாம் எண்ணிப் பழனியாண்டவனைச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது, ‘‘உடனே உங்களை அழைத்து வரச் சொன்னார் அரசர்’’ என்ற குரல், பழனித்தேவரின் சிந்தனையைக் கலைத்தது. பழனித்தேவர் நிமிர்ந்து பார்த்தார்.

அரசாங்கக் காவலர்கள் பலர் நின்றிருந்தார்கள். பழனித்தேவர் திகைத்து, மனம் குழம்பினார்; ‘‘என்ன குற்றம் செய்தேன் நான்? ஓ…! ஒருவேளை இரவில் நான்செய்த தவறை மன்னர் தெரிந்து கொண்டிருக்கிறாரா? அப்படியிருந்தால் அதுவும் நல்லதுதான். எனக்கு நானே தண்டனை அளித்துக் கொள்வதைவிட, அரசரே தண்டனை அளிக்கத் தீர்மானித்திருக்கிறார் என்றால், அந்த ராஜ தண்டனையை ஏற்க வேண்டியதுதான். ஆனால், நான் தீர்மானித்தபடி, எனக்குத் தண்டனை தருவாரா அரசர் என்று பார்க்கலாம்’’ என்று பயத்துடன் போனார். அவர் பின்னால் போனார்கள் அரசாங்கக் காவலர்கள்.

ராஜ சபையில்…

புலவர் பெருமக்கள், பிரமுகர்கள், சேனாதிபதிகள், அமைச்சர்கள் எனப் பலரும் இருந்தார்கள். என்றுமில்லாத பொலிவுடன் விளங்கியது சபை. அரசவைக்குள் நுழைந்த பழனித்தேவரை, அரசர் மிகுந்த பணிவோடு வரவேற்றார். அந்தப் பணிவு பழனித் தேவரின் இதயத்துடிப்பை அதிகமாக்கியது. அதுவரை அரச சபையைப் பார்க்காத அவர், மிரளமிரள விழித்தார். அதைக் கவனிக்காததைப் போல அரசர், பழனித்தேவரின் கைகளைப் பிடித்து அவரை உயர்ந்ததோர் ஆசனத்தில் உட்கார வைத்தார்.

அரசர் ஏதோ நாடகமாடுகிறார் என்று நினைத்த பழனித் தேவர், ‘‘மன்னா! எனக்குத் தர வேண்டிய தண்டனையை சீக்கிரம் கொடுங்கள்! இதோ! நான் தயாராக இருக்கிறேன்’’ என்றார். அரசர் அசரவில்லை; ‘‘நானும் அதற்குத் தயாராகத்தான் இருக்கிறேன். இன்னுமா தாமதம்? கொண்டு வாருங்கள் அதை!’’ என்று பணியாட்களைப் பார்த்துக் கர்ஜித்தார். நடந்தது அனைத்தையும் சபையில் இருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏதோ நடக்கப்போகிறது என்று மட்டும் புரிந்துகொண்ட அவர்கள், அரசரையும் பழனித்தேவரையும் மாறிமாறிப் பார்த்தார்கள். அதற்குள் காவலர்கள் ஒரு தங்கத் தாம்பாளத்தைக் கொண்டு வந்து, மன்னரிடம் நீட்டினார்கள். அதிலிருந்து இரண்டு தங்கக் கடகங்களை எடுத்துப் பழனித்தேவரின் கைகளில் அணிவித்தார் அரசர். அத்துடன் பீதாம்பரம் போர்த்தி, தங்கக் கட்டிகளையும் நவரத்தினங்களையும் காணிக்கையாகச் சமர்ப்பணம் செய்தார்.

பழனித்தேவர் கூவினார்; ‘‘மன்னா! என்ன இது? என் கையை வெட்டி கால்களைத் துண்டியுங்கள்; அது நியாயம். தண்டனை அளிக்க வேண்டிய என் அங்கத்திற்குத் தங்கத்தாலான அணி கலன்களை மாட்டி, பொன்னாடை போர்த்தலாமா?’’ என்றார். ஒன்றும் புரியாவிட்டாலும், சபையில் இருந்தவர்கள் மிரண்டார்கள். ஆனால் அரசரோ கைகளைக் குவித்து, ‘‘பழனித்தேவரே! உங்களைப்பற்றி நன்றாகப் புரிந்து கொண்டேன் நான்.

பழனி யாண்டவன் என் கனவில் வந்து நடந்ததையெல்லாம் கூறினான். அவன் அருள் இல்லாவிட்டால் உங்களைப்பற்றி எங்களால் அறிந்து கொள்ள முடியுமா? இதுவரை உங்களைப்பற்றி அறியாதிருந்த நாங்கள் அல்லவா, உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!’’ எனப் பணிவோடு சொன்னார். அதன் பிறகு, குளத்து மீன் வரலாறு – பழனித்தேவர் காவல் – மீனவப் பெண் வேண்டுதல் – பழனியாண்டவன் செய்த உதவி – பழனித்தேவர் தடியால் அடித்தது – தன் கனவில் வந்து பழனியாண்டவர் அருளிய செய்தி – என அனைத்தையும் அரசர் சபையில் அறிவித்தார். அனைவரும் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஆறுமுகனின் அன்பு பக்தர் ஒருவர் அருள் வந்து, ‘‘பழனித்தேவா! பக்தனே! உன்னை நான் நன்றாக அறிவேன். பிண்டத்தில், உனது உள்ளம்தான் எனது கோயில். அண்டத்தில் உள்ள எனது (பழனியாண்டவன்) சந்நதிக்கு வா!’’ எனச் சொல்லி அடங்கினார். கேட்டுக் கொண்டிருந்தவர்களின் மனம் உருகியது. ஆனால் அதைக் கேட்ட பழனித்தேவரோ, ஆசனத்தில் இருந்து குதித்தெழுந்து மலையைநோக்கி ஓடினார். அனைவரும் பின் தொடர்ந்து ஓடினார்கள்.

பழனித்தேவர் விரைந்தோடிப் பழனியாண்டவன் சந்நதியில் நின்று, ‘‘முருகா! முடிவில்லாத அருள் உடையவனே! மீன் கூடையைச்சுமந்து அறிவில்லாத என் கையால் அடியும் தாங்கினாயே! யோகிகளாலும் முனிவர்களாலும் அறிய முடியாத உன் திருவடிகளில் என்னைச் சேர்த்துக்கொள்!’’ என்று கூவிக் கீழே விழுந்தார். அப்போது பழனித்தேவரின் திருமேனியில் இருந்து அவரது ஆன்மா, ஒரு நட்சத்திர வடிவில் ஔி வீசி பழனியாண்டவன் திருவடிகளில் மறைந்தது. அரசர் முதலான அனைவரும் அதைக் கண்டு மெய்
சிலிர்த்துக் கைகளைக் குவித்தார்கள்.

ஏழைப் பெண்ணின் செயல்களைப் பார்ப்போம்…

அவள் தினந்தோறும் பழனிமலையின் அடிவாரத்திலிருந்து உச்சி வரை அனைத்துப் படிகளையும் தூய்மைசெய்து, மாக் கோலம் இட்டாள். இரவு அர்த்த ஜாமப்பூஜை முடிந்ததும்,
‘‘இது பக்தர்கள் திருவடி பட்ட இடம்’’ எனச் சொல்லி, ஆலய மதிலைச் சுற்றித் தரையில் உருண்டு புரண்டு வலம் வந்தாள். கோயில் அதிகாரிகள் தங்கள் கனவில் வந்து கந்தக் கடவுள் சொன்னபடி ஏழைப் பெண்ணுக்குக் காலை – மாலை இரு வேளைகளிலும் பிரசாதம் தந்தார்கள். பழனியாண்டவன் சந்நதியில் பக்தியுடன் பலகாலம் தொண்டு செய்த அந்த ஏழைப்பெண், பழனியாண்டவன் திருவடிகளை அடைந்தாள்.

``ஆனாய் எனை அருளாய் எனும்
அரிவைக்கு ஒரு கூடை
நீளாசல சரம் ஈதரசூ நிசியார் கரவினனாத்
தானான் உறு பழனிப்பெயர் தடியால் அடி கொடுமே
வாளாளனை உயர்வாக்கிய மணியே! எனை மறவேல்!’’
– என இவ்வரலாற்றைப் பழந்தமிழ்ப் பாடல் பாடுகிறது.

தொகுப்பு: பி.என்.பரசுராமன்

The post விசித்திர தண்டனை appeared first on Dinakaran.

Read Entire Article