விழுப்புரம்: “மது விலக்குக்காக ஒலிக்கும் குரல்கள் அனைத்தையும் எங்கள் குரலாகவே பார்க்கிறோம். ஆனால், மது ஆலைகளை நடத்தும் திமுகவின் பிரதிநிதிகளை மேடையில் வைத்துக்கொண்டு மதுவிலக்கு பற்றி பேசுவதால் என்ன பயன்?” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (அக்.3) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கர்நாடகாவில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் விவரங்கள் அடங்கிய அறிக்கை விரைவில் கர்நாடக அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும், அதில் இடம் பெற்றுள்ள பரிந்துரைகள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்றும் அம்மாநில முதல்வர் சித்தராமய்யா அறிவித்துள்ளார். சமூக நீதியைக் காப்பதற்கான இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. கர்நாடகத்திடம் இருந்தாவது சமூக நீதிப் பாடத்தை தமிழக அரசு கற்க வேண்டும்.