வந்தவாசி, ஜன. 14: வந்தவாசி அடுத்த ரங்கராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (52) ஆட்டு வியாபாரி. இவர் நேற்று கீழ்கொடுங்காலூர் காவல் நிலையம் எதிரே உள்ள கால்நடை மருத்துவமனை முன்பாக தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றார். மீண்டும் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அங்கு வந்து பார்த்தபோது பைக் திருட்டு போனது தெரியவந்தது. உடனடியாக எதிரே உள்ள காவல் நிலையத்தில் ஏழுமலை புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலு கண்காணிப்பு கேமராவை ஆய்வு மேற்கொண்டார். அதில் மங்கல மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த வந்தவாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அசோக்வளவன்(35) நிறுத்தி இருந்த பைக்கை எடுத்துச் சென்றது கேமராவில் பதிவாகி இருந்தது. இதற்கிடையே போலீசார் கண்காணிப்பு கேமராவில் கண்டுபிடித்ததை அறிந்த அசோக்வளவன் காவல் நிலையத்திற்குள் வந்து எடுத்துச்சென்ற பைக்கை விட்டுள்ளார். பின்னர் போலீசார் அசோக்வளவனை விசாரணை செய்து வந்தனர்.
இதனை அறிந்த விசிக மண்டல பொறுப்பாளர் ம.கு. மேத்தா ரமேஷ் உள்ளிட்ட கட்சியினர் காவல் நிலையத்திலிருந்து அசோக்வளவனை விடுவிக்க வேண்டும் என கோரினார்கள். போலீசார் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது மேலும் பைக்கை அசோக்வளவன் எடுத்து செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது என விசிக நிர்வாகிகளிடம் எடுத்துக் கூறியதாக கூறப்படுகின்றது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாத விசிகவினர் மங்கல மாமண்டூர் கூட்டுச் சாலையில் திடீரென மறியல் போராட்டம் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி கங்காதரன் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
சமரசத்தை ஏற்காததால் மறியல் போராட்டம் செய்த மண்டல பொறுப்பாளர் மேத்தா ரமேஷ் உள்ளிட்ட 16 நபர்களை கைது செய்து தேசூர் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மேத்தா ரமேஷுக்கு ரத்தக் கொதிப்பு அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் அவர் உடல் சோர்வு ஏற்பட்டதால் உடனடியாக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு மேத்தா ரமேஷ் போலீசார் அழைத்து வந்தனர். இதனிடையே ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் கீழ்கொடுங்காலூர் போலீசார் பைக் திருட்டு வழக்கில் வந்தவாசி கிழக்கு ஒன்றிய விசிக செயலாளர் அசோக்வளவனை போலீசார் கைது செய்தனர். மறியல் போராட்டம் செய்த 15 பேர் போலீசார் பாதுகாப்பில் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post விசிக ஒன்றிய செயலாளர் கைது மறியல் போராட்டத்தால் பரபரப்பு வந்தவாசி அருகே ஆட்டு வியாபாரி பைக் திருட்டு appeared first on Dinakaran.