
சென்னை,
காஷ்மீரில் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுடனான அனைத்து உறவையும் இந்தியா துண்டித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள் கடந்த 27-ந்தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த கால அவகாசத்துக்குள் பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுகிறார்களா? என்பதை அந்தந்த மாநில அரசுகள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று மாநில முதல்-மந்திரிகளுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் பெயர், விவரங்களை குடியுரிமை அதிகாரிகள் கணக்கெடுத்து வெளியேற்றும் பணியை தொடங்கினார்கள். அந்த வகையில், தமிழ்நாட்டில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. உள்துறை செயலாளர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பாகிஸ்தான், வங்கதேசம், நைஜீரியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்து விசா முடிந்து தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை அடையாளம் கண்டறிந்து வெளியேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிஜிபி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.