வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றிய தேவரியம்பாக்கத்தில் 100 நாள் பணிகளை பார்த்து ஒன்றிய அரசின் திட்ட இயக்குனர் வியந்து பாராட்டினார். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியாம்பாக்கம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ஊராட்சியில் பல்வேறு பணிகள் ஊராட்சித் தலைவர் அஜய்குமார் தலைமையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், ஊராட்சியில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட 16,000 மரக்கன்றுகள் இங்குள்ள நான்கு குறுங்காடுகளில் நடவு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சியில் நான்கு புதிய கசிவு நீர்க்குட்டைகள், தடுப்பணைகள் உருவாக்கியதுடன், ஏரிக்கரைகள், சாலை ஒரங்கள் மற்றும் ஊராட்சி காலி இடங்களில் பனை விதைகள் இதுவரை 25,000 எண்ணிக்கையில் விதைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் உருவாக்கப்பட்ட பசுமை வனம் மற்றும் குறுங்காடு, மூலிகை தோட்டம், பனை விதைகள் நடவு செய்யப்பட்ட இடங்கள் என ஊராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளை பார்வையிட்ட தேசிய ஊரக வேலை உறுதி திட்ட இயக்குனர் சஞ்சயகுமார் இது போன்ற பணிகளை கண்டு வியந்து ஊராட்சி நிர்வாகத்தை வெகுவாக பாராட்டினார். இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனர் குமார், காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குனர் ஆர்த்தி, செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் மற்றும் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
The post வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கத்தில் 100 நாள் பணிகளை பார்த்து வியந்த ஒன்றிய அரசு திட்ட இயக்குனர் appeared first on Dinakaran.