வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம்: போலீசார் துரத்தியபோது லஞ்சப்பணத்துடன் குளத்தில் குதித்த கிராம நிர்வாக அதிகாரி

5 hours ago 2


கோவை மாவட்டம் தொம்பிலிபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர், வாரிசு சான்று வாங்க விண்ணப்பித்து இருந்தார். சான்று வழங்குவதற்கு, மத்வராயபுரம் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் வெற்றிவேல் என்பவர் 3,500 ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளார்.

அதற்கு கிருஷ்ணசாமி, "லஞ்சம் தர முடியாது" என்று கூறி உள்ளார். இதனால், சான்று வழங்காமல், கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கிருஷ்ணசாமி கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவரை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் கிருஷ்ணசாமியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர். பின்னர் அவர்களின் அறிவுரையின்பேரில் கிருஷ்ணசாமி நேற்று முன்தினம் இரவு வெற்றிவேலை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், தான் கோவை புட்டுவிக்கி சாலையில் நிற்பதாகவும், அங்கு வந்து லஞ்சப்பணத்தை தருமாறும் கேட்டுக் கொண்டார்.

அதன்படி கிருஷ்ணசாமி அங்கு சென்று கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலிடம் லஞ்சப்பணம் ரூ.3,500-ஐ கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று வெற்றிவேலை மடக்கி பிடிக்க முயன்றனர். உடனே சுதாரித்துக்கொண்ட வெற்றிவேல், தனது மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார். ஆனால் போலீசார் விடாமல் அவரை வாகனத்தில் துரத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வெற்றிவேல் போலீசிடம் இருந்து தப்பிக்க லஞ்சப்பணத்தை பேரூர் குளத்தில் வீசினார். பின்னர் அவரும் குளத்தில் குதித்து தப்பி செல்ல முயன்றார்.

இதனால் போலீசாரும் குளத்தில் குதித்து நீந்தி சென்று வெற்றிவேலை மடக்கி பிடித்தனர். மேலும் குளத்தில் வீசப்பட்ட ரூ.3,500-ஐயும் கைப்பற்றினார்கள். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

Read Entire Article