சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தொடர்ந்து அது அந்தப் பகுதியில் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலை கொள்ளும். இதன் காரணமாக, அடுத்து வரும் 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும், என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று (அக்.14) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் பூதலூரில் 12 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலை தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி தொடர்ந்து அது அந்தப் பகுதியில் நிலவி வருகிறது.