சென்னை: கேரளா மற்றும் தென்தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலகிறது. இதனால் நாளை (அக்.8) மற்றும் நாளை மறுதினம் (அக்.9) தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் அக்.10-ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், அக்.11-ம் தேதி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், அக்.12-ம் தேதி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருசில இடங்களிலும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கேரளா மற்றும் தென்தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலகிறது. இதன் காரணமாக, இன்று (அக்.7) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில், காரைக்கால், பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.