வாடிக்கையாளர்களின் விருப்பமே எங்களின் பலம்!

6 days ago 4

நன்றி குங்குமம் தோழி

‘‘ருசிகளின் சங்கமம் என்றால் அது ஸ்டிரீட் ஃபுட்தான். அங்குதான் நம்முடைய பாரம்பரிய உணவு முதல் மேலை நாட்டு உணவு வகை வரை எல்லாவிதமான உணவுகளும் கிடைக்கும். ஆனால் அதில் சில உணவகங்களில் சுகாதாரமின்றி தயாரிப்பதால், நாம் அதிகமாக அது போன்ற கடைகளுக்கு செல்வதில்லை. ஆனால் சுகாதாரமாகவும், அதே சமயம் ஆரோக்கிய முறையில் உணவுகளை வழங்க முடியும்’’ என்கிறார் ராஜலட்சுமி. இவர் சென்னை பெசன்ட் நகரில், பீச் அருகில் ‘சாய் கொழுக்கட்டை’ என்ற பெயரில் சிறிய உணவுக் கடையினை நடத்தி வருகிறார். இங்கு பலவித வெரைட்டி உணவுகளை வீட்டுச் சுவையில் கொடுத்து வருகிறார்.

‘‘விழுப்புரம்தான் எனக்கு சொந்த ஊர். எங்க வீட்டில் நாங்க மொத்தம் மூன்று பெண்கள். நான் சின்னப் பெண்ணாக இருக்கும் போதே அப்பா இறந்துட்டார். அம்மாதான் தனியாளாக வேலைக்கு போய் எங்களை படிக்க வைத்தாங்க. ஆனால் அங்கு பெரிய அளவில் வேலை வாய்ப்பு இல்லை என்பதால் பிழைப்பு தேடி நாங்க சென்னைக்கு வந்துட்டோம். இங்கு ஆரம்பத்தில் அம்மா சில காலம் கட்டிட வேலை செய்தாங்க.

அதில் வந்த வருமானத்தில்தான் எங்களுக்கு திருமணமும் முடித்தாங்க. திருமணத்திற்குப் பிறகு நான் இங்கு ஒரு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு உணவுப் பரிமாறுவது தான் என் வேலை. அப்போதுதான் உணவுகளை எப்படி சமைக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். அப்படித்தான் கொழுக்கட்டை செய்ய கற்றுக் ெகாண்டேன். அதன் பிறகு அந்த வேலையை விட்டுவிட்டு கால்சென்டர் நிறுவனத்தில் டேட்டா எண்ட்ரி வேலைக்கு சேர்ந்தேன். இதற்கிடையில் எனக்கு குழந்தை பிறந்தது. அதன் பிறகு வேலைக்குப் போக முடியவில்லை.

அதனால் வீட்டில் இருந்தபடியே ஏதாவது வேலை செய்ய நினைத்தேன்’’ என்றவர் தன்னிடம் இருந்த சேமிப்பு கொண்டுதான் இதனை ஆரம்பித்துள்ளார்.‘‘குழந்தையை வைத்துக் கொண்டு தினமும் வேலைக்கு செல்வது முயலாத காரியம் என்பதால் சொந்தமாக ஒரு தொழில் ஆரம்பிக்க விரும்பினேன். என்னிடம் பெரிய அளவில் சேமிப்பு எல்லாம் இல்லை. அதைக் கொண்டு சிறிய அளவில் ஏதாவது கடை தொடங்க முடியும் என்பதால், 2017ல் ‘சாய் கொழுக்கட்டை’ என்ற பெயரில் இந்த உணவகத்தைத் தொடங்கினேன்.

சிறிய வண்டியில் வைத்துதான் நானும் என் கணவரும் உணவுகளை விற்பனை செய்து வந்தோம். முழுக்க முழுக்க வீட்டில் செய்வது போல்தான் செய்து வழங்கி வந்தேன். நான் ஏற்கனவே வேலை பார்த்த உணவகத்தில் கொழுக்கட்டை செய்ய கற்றுக் கொண்டதால், முதலில் கொழுக்கட்டை மட்டும் கொடுக்க ஆரம்பித்தேன். வீட்டில் சாப்பிடுவது போல இருப்பதால் பலரும் கொழுக்கட்டை சாப்பிடவே வரத் துவங்கினார்கள்.

அவர்கள் கொழுக்கட்டை மட்டுமில்லாமல் வேறு உணவுகளும் வழங்கலாமே என்று சொன்ன போது, மினி இட்லி, பொடி இட்லி, கார கொழுக்கட்டை, சாம்பார் இட்லி எல்லாம் செய்ய ஆரம்பித்தோம். வியாபாரம் நல்லபடியாக நடந்ததால் தள்ளுவண்டிக் கடையை மாற்றி அமைத்தேன். அதன் பிறகு எங்களின் மெனுவில் உணவின் பட்டியலும் அதிகமானது. அதற்கு காரணம் என் வாடிக்கையாளர்கள்தான். அவர்கள் கேட்கும் ஒவ்வொரு உணவினையும் நான் இங்கு அறிமுகம் செய்ய துவங்கினேன்.

கடற்கரை என்பதால் பலர் நடைப்பயிற்சி செய்ய வருவார்கள். அவர்கள் சிறு தானிய வகை உணவுகளை கேட்டதால், சாமை, வரகு, கம்பு, ராகி, குதிரைவாலி, தினை என அனைத்து சிறுதானியங்களிலும் தோசைகளை அறிமுகம் செய்தேன். இது போக சீஸ் ஆனியன் பொடி தோசை, சீஸ் கார்லிக் பொடி தோசை, பட்டர் கொள்ளு தோசை, பொடி ஊத்தப்பம், பட்டர் கார்லிக் தோசை, மிளகு தோசை, மணத்தக்காளி தோசை, பணியாரம் என 150 வெரைட்டி உணவுகளை தருகிறோம். இட்லிக்கு சாதாரண பொடி இல்லாமல், கொள்ளு, கறிவேப்பிலை, பூண்டு என பல வகை பொடிகளும் கொடுக்கிறேன். மூன்று விதமான சட்னி வகைகள் உண்டு.

அடையுடன் அவியல் மற்றும் வெல்லம் சேர்த்து கொடுக்கிறோம். குடும்பமாக வருபவர்கள் மட்டுமில்லாமல் பேச்சிலர்கள்தான் எங்களின் ரெகுலர் கஸ்டமர்கள். அவர்களில் ஒருவருக்கு விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. மருத்துவர் பிரண்டை வகைகளை சாப்பிடச் சொல்லியிருக்கிறார். அவர் என்னிடம் பிரண்டை தொக்கு செய்து தர சொல்லி கேட்டார். என் பாட்டி சொன்னபடி செய்து பார்த்தேன். முதலில் சரியா வரலை. இரண்டு மூன்று முறைக்கு பிறகு நன்றாக வந்தது. அதன் பிறகு அதனை அவருக்கு செய்து கொடுத்தேன். இப்போது அதுவும் என்னுடைய மெனுவில் சேர்ந்துவிட்டது. ஒரு தொக்கு மட்டுமில்லாமல், வெரைட்டி தரலாம் என்று கொத்தமல்லி, கறிவேப்பிலை தொக்கும் தருகிறோம்.

எங்களின் புதிய அறிமுகம் கேண்டில் லைட் தோசை. பிறந்தநாள் கொண்டாடும் போது கேக்தான் ஊட்டி விடணுமா? தோசையிலும் செய்யலாமே என்று ஐடியா செய்ததுதான் இந்த தோசை. தோசையில் இருக்கும் கேண்டிலை ஊதி தோசையை மற்றவர்களுக்கு ஊட்டி விட்டு சாப்பிடுவார்கள். இது குழந்தைகள் மட்டுமில்லாமல் டீனேஜ் வயதினரையும் வெகுவாக ஈர்த்துள்ளது. இப்போது இன்ஸ்டா மூலம் ஆன்லைனிலும் நாங்க டெலிவரி செய்கிறோம்.

அதில் ஆர்டரை பதிவு செய்தால் நாங்க நேரடியாக டெலிவரி செய்திடுவோம். தற்போது திருவான்மியூரிலும் கடை ஒன்றை துவங்கி இருக்கிறோம். அதை என் கணவர் பார்த்துக் கொள்கிறார். என்னுடைய உணவில் நான் செயற்கை நிறங்கள் மற்றும் உடலை கெடுக்கக் கூடியவற்றை சேர்ப்பதில்லை. எல்லோருக்கும் ஒரே உடல் தானே. அதனால் நல்ல ஆரோக்கியமான உணவினை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’’ என்கிறார் ராஜலட்சுமி.

தொகுப்பு:  ராஜலட்சுமி

The post வாடிக்கையாளர்களின் விருப்பமே எங்களின் பலம்! appeared first on Dinakaran.

Read Entire Article