காஞ்சிபுரம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 47வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் ஆலந்தூர், கத்திப்பாரா அருகே அமைந்துள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் அவைத்தலைவர் துரைசாமி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட துணைச் செயலாளர்கள் இ.கருணாநிதி எம்எல்ஏ, வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, மாவட்ட பொருளாளர் விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில், கலைஞரின் மருமகனும், முரசொலிமாறனின் சகோதரருமான முரசொலி செல்வம் மறைவிற்கு முதலில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மண்ணில் திமுகவின் பவளவிழா பொதுக்கூட்டம் நடைபெற வாய்ப்பு வழங்கிய தலைமை கழகத்திற்கும், கலந்துகொண்ட திமுக நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிப்பது, பவளவிழா பொதுக்கூட்டம் முடிவுற்ற சில நிமிடங்களில், துணை முதல்வர் பொறுப்பை நம்முடைய இளைய தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட அறிவிப்பை வெளியிட்டு மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 47வது பிறந்தநாளை, “எளியோர் எழுச்சி நாளாக” காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் மிகவும் சிறப்பான முறையில் எழுச்சியுடன் கோலாகலமாக கொண்டாடும் வகையில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள 40 ஆதரவற்றோர் இல்லங்களில் மதிய உணவு வழங்கி, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி பேரூரில் உள்ள அனைத்து வார்டு கிளைகளில், கொடி தோரணங்களை கட்டி கட்சி கொடியை ஏற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது, வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியை முனைப்புடன் செய்திட வேண்டும், “காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக” என்ற பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், குன்றத்தூர் கிளையில் வங்கி கணக்கு தொடங்குவது, இந்த கணக்கை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் மாவட்ட பொருளாளர் ஆகியோர் கூட்டாக இணைந்து, இயக்குவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் ஏகமனதாக முடிவெடுத்து நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் தலைமை தீர்மானக்குழு செயலாளர் வைதியலிங்கம், தாம்பரம் மாநகரச் செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ, சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் பாஸ்கர் சுந்தரம், ரத்னா லோகேஸ்வரன், ரவிச்சந்திரன், தசரதன், முன்னாள் எம்எல்ஏக்கள் தமிழ்மணி, இதயவர்மன், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அன்புச்செழியன், அன்புச்செல்வன். பகுதிச் செயலாளர்கள் சந்திரன், குணாளன், ஜெயக்குமார், ஜோசப் அண்ணாதுரை, இந்திரன், காமராஜ், பெருங்களத்தூர் சேகர், மாடம்பாக்கம் நடராஜன், கருணாகரன், பெர்னாட், செம்பாக்கம் சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் கோபால், கருணாநிதி, பையனூர் சேகர், வந்தேமாதரம், மூவரசம்பட்டு ரவி, ஆப்பூர் சந்தானம், லோகநாதன், நகர செயலாளர்கள் பாபு, சண்முகம், ஜபருல்லா, சத்தியமூர்த்தி, எம்.கே.டி.கார்த்திக். பேரூர் செயலாளர்கள் தேவராஜ், யுவராஜ், சதீஷ்குமார், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் கோல்டு டி.பிரகாஷ், தையூர் விஜயகுமார், ராமமூர்த்தி, கமலகண்ணன், மணிகண்டன், ஜானகிராமன், பிரபு, ஆல்பர்ட் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
The post வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியை முனைப்புடன் செய்திட வேண்டும்: திமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.