வாகை சூடும் வெற்றியாக மாற்றுங்கள்

16 hours ago 1

நாம் எதைக் குறித்து அடிக்கடி நினைக்கின்றோமோ அது கண்டிப்பாக நடக்கும். இது உண்மையா? உண்மைதான்! சாக்ரடீசிடம் ஒருவன், ஐயா எனக்கு அறிவு வேண்டும் என்றான். சரி என்னுடன் வா என்று அவனை அழைத்துக் கொண்டு ஒரு குளத்திற்கு சென்றார். அவன் தலையைப் பிடித்துக் குளத்திற்குள் சென்றார். பிறகு தலையை பிடித்துக் குளத்திற்குள் மூழ்கடித்தார். சில நிமிடங்கள் கழித்து தன் பிடியை விடவே குளத்திற்குள் மூழ்கி இருந்தவன் எழுந்தான்.நான் உன் தலையைக் குளத்திற்குள் மூழ்கடித்ததும் என்ன நினைத்தாய்? “காற்று காற்று” என்றேன். வேறு எதை பற்றியாவது நினைத்தாயா? ‘இல்லை காற்று மட்டுமே தேவை’ என நினைத்தேன் என்றார்.பார்த்தாயா! நீ காற்று.. காற்று… என்று நினைத்த உடனே உனக்கு காற்று கிடைத்து விட்டது.இது போலவே உனக்கு எது வேண்டுமென்றாலும் அதைப்பற்றி நம்பிக்கையுடன் நினை உடனே கிடைத்துவிடும் என்றார் சாக்ரடீஸ். கேள்வி கேட்டவனும் அறிவைப் பெற புறப்பட்டான்.நாமும் இந்த மனிதனைப் போல தேவையான எதையும் இந்த உலகத்தில் பெற முடியும். நம்பிக்கையுடன் கற்பனை செய்யப் பழகிக் கொண்டால் அது ஆழ்மனதில் பதிந்து நாம் விரும்பியதை அடைய வழிகாட்டி விடும்.

நமது இலக்கை நோக்கி நாம் நடந்து போகும் பாதை பூக்களாலும், பஞ்சு மெத்தைகளாலும் இருக்க வேண்டும் என எண்ணாதீர்கள். இலக்கை நோக்கி செல்லும்போது கஷ்டங்களும், தோல்விகளும் அந்த பாதையை கடினமாக்கும். அப்போதுதான் அந்த பாதையில் செல்லும்போது நம் பாதங்களுக்கு வலிமை கிட்டும்.பாதங்கள் வலிமை பெற்றால் தான் பரந்து விரிந்த இலக்கை நோக்கிய பயணத்திற்கு ஆயத்தமாவோம்.அத்தகைய இலக்கை நோக்கிய பயணத்தில் புதிய சிந்தனையுடன், புதிய உத்திகளை கையாண்டால் நாம் பெறக்கூடிய வெற்றி வாகை சூடும் வெற்றியாக மாறிவிடும். இதற்கு உதாரணமாய் இந்த சாதனை பெண்மணியை சொல்லலாம்.யுஎஸ்வி (USV) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுஎஸ் வைட்டமின்ஸ் மருந்து (USV Private Limited) உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் லீனா திவாரி, இந்திய மருந்து உற்பத்தித் துறையில் குறிப்பிடத்தகுந்த பெண் தொழிலதிபர் ஆவார்.இன்று 3.7 பில்லியன் டாலர்கள் நிகர மதிப்பு கொண்ட லீனா திவாரி தொழிலதிபராக மட்டுமல்ல, சமூக அக்கறையுடன் சமுதாயப் பணிகளிலும் சிறந்து விளங்குபவர். மும்பையிலிருந்து உலக அரங்குக்கு அவர் உயர மேற்கொண்ட பயணத்தைப் பற்றி பார்ப்போம்.

லீனா திவாரி மார்ச் 9, 1957-ல் மும்பை புறநகர்ப் பகுதியில் பிறந்தார். மும்பையில் வணிகத்தில் இளங்கலை பட்டம் பெற்ற லீனா, பிறகு அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பயின்றார்.இவரது தாத்தா விதால் பாலகிருஷ்ண காந்தியால் 1961-ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம்தான் ‘யுஎஸ்வி’ ஆகும். இந்த நிறுவனத்தில் தன் எம்பிஏ பட்டத்துடன் நுழைந்த லீனா திவாரி தனது புதிய சிந்தனையுடன்,புதிய உத்திகள் மூலம் யுஎஸ்வி நிறுவனத்தை உச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.தொடக்கத்தில் மருந்துகளை இறக்குமதி செய்து கொண்டிருந்த யுஎஸ்வி, லீனாவின் முயற்சியினால் உற்பத்தியையும் தொடங்கியது. ரெவ்லான் நிறுவனத்துடன் சேர்ந்து மேற்கொண்டது. யுஎஸ் வைட்டமின்ஸ் நிறுவனத்தின் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியில் ஜெர்மனி ஜானரிக் மருந்து நிறுவனமான ஜூட்டா பார்மாவை வாங்கியது பெரிய பங்களிப்பை ஏற்படுத்தியது. இது லீனா திவாரியின் தொலைநோக்கான அயல்நாட்டுச் சந்தை விரிவாக்கத்தை பிரதிபலித்தது.

லீனா திவாரியின் நிகர மதிப்பு, 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் சுமார் ரூ. 30,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவின் செல்வந்த நபர்களில் ஒருவராக லீனா திகழ்கிறார். லீனா எப்படி தொழிலில் வெற்றி பெற்று நிதியளவில் வலுவடைந்தாரோ, அதேபோல் அவரது சமூகத் தொண்டுகளும் அதற்குச் சம அளவில் வலுவாக அமைந்தது.ஹூரூன் ரிப்போர்ட் இந்தியா அமைப்பின்படி, நன்கொடையாளர் பட்டியலில் 2019-ஆம் ஆண்டுக்கான பெண் கொடையாளர்களில் 3-வது இடத்தைப் பெற்று சமூக சேவையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். அவர் ரூ.34 கோடி (சுமார் 4 மில்லியன் அமெரிக்க டாலர்) நன்கொடை அளித்தது, சமூக நலனுக்கான அவரது அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.கார்ப்பரேட் பொறுப்புகளையும் தாண்டி அவரது ஆர்வம் பல கிளைகள் பரப்புவதாக அமைந்துள்ளது. லீனா திவாரி இயற்கையின் மீது பேரார்வம் கொண்டவர். மேலும் எழுத்துப் பணியிலும், நடனத்திலும் கூட தன் கவனத்தைச் செலுத்தி வருகிறார். நிறைய புத்தகங்களை வாசிப்பவராகவும் இருந்து அறிவை விரிவடைய செய்து வருகிறார்.

வனவிலங்குகள் மீது கொண்ட ஆர்வத்தால் வனத்தில் சுற்றித் திரிதலும் லீனாவின் பொழுது போக்குகளில் ஒன்று. இவரது எழுத்துத் திறனுக்குச் சான்றாக தன் தாத்தா மற்றும் யுஎஸ்வி நிறுவனருமான விதால் பாலகிருஷ்ண காந்தியின் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதி வெளியிட்டுள்ளார்.இது குடும்பப் பாரம்பரியத்தின் மீதான அவரது விசுவாசத்திற்கு சாட்சி. பிரசாந்த் திவாரி என்பவரை மணந்தார் லீனா. பிரசாந்த் திவாரி யுஎஸ்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இருவருக்கும் 2 பிள்ளைகள். லீனாவின் மனிதாபிமான பங்களிப்புகளில் குறிப்பிடத் தகுந்தது. பின்தங்கிய பெண்களுக்கான டாக்டர் சுசீலா காந்தி மையத்துக்கு கணிசமான நன்கொடைகளை அளித்து இளம் பெண்களை மேம்படுத்தியதைக் குறிப்பிடலாம்.

லீனா திவாரியின் வெற்றி அவரது கார்ப்பரேட் சக்சஸ் என்பதுடன் சமூக நற்பணிகளில் அவரது சமூக பங்களிப்பையும் சமூக அக்கறை கொண்ட பெண்மணியாகவும் திகழ்ந்து வருகிறார்.இவரது சமூகப் பொறுப்பு உதவும் எண்ணம் கொண்ட பலருக்கும் பெரிய தூண்டுதலாக இருக்கிறது. தனது துறை சார்ந்து வெற்றி பெறுவது மட்டுமல்ல, சமூக நோக்கத்துடன் நற்பணிகளையும் செய்து மற்றவர்களுக்கு ஒரு மிகச் சிறந்த முன்னுதாரணமாக இருந்து வருகிறார் லீனா திவாரி என்பதில் ஐயமில்லை.ஒவ்வொரு மனிதனும் வெற்றிக்காக போராடுவது உலகில் தன்னை அடையாளப்படுத்துவதற்காகத் தானே! அதனால் அதற்கான வெற்றி சிறப்பானதாக இருக்கட்டும். அதுவும் லீனா திவாரி போல வாகை சூடும் வெற்றியாக இருக்கட்டும். இதனைக் கருத்தில் கொண்டு புதிய சிந்தனையுடன், புதிய உத்திகளை கையாண்டு முயற்சி செய்யுங்கள். முயற்சிகளில் ஏற்படும் தோல்வியைக் கண்டு விலகி ஓடிவிடாதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். தோற்றுவிட மாட்டேன் என்ற நம்பிக்கையை ஆழ்மனதில் பதிவு செய்யுங்கள். அப்போதுதான் உங்களையும் இந்த உலகம் ஒருநாள் ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்கும்.

The post வாகை சூடும் வெற்றியாக மாற்றுங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article