சென்னை: வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விவசாயிகளின் நலன் பாதிக்காத வகையில் தர்மபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கவும், அவர்களுக்கு பல்வேறு புதிய திட்டங்களை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக வேளாண்மைத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, நீர்வளத்துறை, பட்டு வளர்ச்சித் துறை போன்ற துறைகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில், சிறுதானியங்கள் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் (உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியம்), உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் மக்காச்சோளம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் – தரிசு நில மேம்பாடு திட்டம் மற்றும் திரவ உயிர் உரங்கள் விநியோகம் ஆகிய திட்டங்கள் ரூ.6.55 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட்டு, 11.12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டு 57,808 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
பயறுவகைப் பயிர்களின் பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்காக ரூ.8.76 கோடி நிதி ஒதுக்கீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு 20,308 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். எண்ணெய்வித்துப் பயிர்களின் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்காக ரூ.2.65 கோடி நிதி ஒதுக்கீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு 10,312 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில், பருத்தி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்காக திட்டங்கள் ரூ.22.66 லட்சம் நிதி செலவில் செயல்படுத்தப்பட்டு 1,128 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காத்திட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திமுக அரசு பொறுப்பெற்ற பின் 59,963 விவசாயிகளுக்கு ரூ.28.23 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தானியங்களில் அறுவடைக்கு பிந்தைய இழப்புகளைக் குறைப்பதற்கு 4,448 தார்ப்பாய்கள் ரூ.36.86 லட்சம் செலவில் 4,448 விவசாயிகளுக்கும், நெற்பயிரில் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு, ரூ.23.87 லட்சம் நிதி செலவில் 9,520 ஏக்கருக்கு துத்தநாக சல்பேட் மற்றும் ஜிப்சம் சுமார் 4,450 விவசாயிகளுக்கும் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.
5,511 வேளாண் கருவி தொகுப்புகள் ரூ.75.46 லட்சம் நிதி செலவில் 5,511 சிறு, குறு விவசாயிகள் பயன் பெறும் வகையில் பொது விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடி விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின்கீழ் இதுவரை, ரூ.59.41 கோடி, 99.025 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடி மானியமாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
அட்மா திட்டத்தின்கீழ் கடந்த மூன்றாண்டுகளில் நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த 641 பயிற்சிகள், 146 கண்டுணர் பயணங்கள். 37 பண்ணைப் பள்ளிகள் மற்றும் 1,575 செயல் விளக்கத் திடல்கள் ரூ.1.51 கோடி செலவில் நடத்தப்பட்டு 26,300 விவசாயிகள் பயனடைந்து உள்ளனர். கடந்த மூன்றாண்டுகளில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் ரூ.7.53 கோடி செலவினத்தில், 158 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டதில் 1.89லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
மேலும், வேளாண் காடுகள் திட்டத்தின்கீழ் ரூ.1.11 கோடி செலவில் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த நிலையான பசுமைப் போர்வை இயக்கம் செயல்படுத்தப்பட்டு, 7.34 லட்சம் மரக்கன்றுகள் விளைநிலங்களில் நடவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை (டான்சிடா) 435 மெட்ரிக் டன் நெல் விதைகளும் 498 மெட்ரிக் டன் சிறுதானிய விதைகளும் 489 மெட்ரிக் டன் பயறுவகை விதைகளும் 443 மெட்ரிக் டன் எண்ணெய்வித்து விதைகளும் 1,865 மெட்ரிக் டன் விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களின் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளில், தொகுப்பு அணுகுமுறை மூலம் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள, அங்ககச் சான்றிதழுடன் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, 2023-24ம் ஆண்டில் ரூ.67.60 லட்சம் ஒதுக்கீட்டில் 1000 ஏக்கர் பரப்பளவில் 20 அங்கக வேளாண்மைக் குழுக்கள் உருவாக்கப்பட்டு 502 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும், 900 எண்கள் ஒருங்கிணைந்த பண்ணைய அமைப்புகள் 50 சதவீத மானியத்தில் ரூ.3.55 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுப் பயிர் சாகுபடி திட்டத்தில், 767 எக்டரில் சிறுதானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் நிலக்கடலை பயிர்கள் ரூ.33.18 லட்சம் நிதி செலவினத்தில் 1,638 விவசாயிகளும், நெல்லுக்குப்பின் பயிர் சாகுபடி திட்டத்தில், 1,249 எக்டரில் உளுந்து பயிர் ரூ.12.33 லட்சம் நிதி செலவினத்தில் 1,002 விவசாயிகளும் பயனடைந்துள்ளனர். 2021-22ல் 4,124 எக்டர் பரப்பளவில், மக்காச்சோளப் பயிரில், அமெரிக்கன் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்திட, ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 1,200 விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும், தென்னையில், வெள்ளை சுருள் ஈ-ஐ கட்டுப்படுத்திட, 2021-22ல், சுமார் 200 ஹெக்ேடர் பரப்பளவில், ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் மஞ்சள் வண்ண ஓட்டுப்பொறி அமைத்தல், கிரைசோபெர்லா இரைவிழுங்கிகள், 200 விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு, தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில், ரூ.2.5 கோடி நிதி செலவில் அரூர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களும், ரூ.2.20 கோடி நிதி செலவில் 5 துணை வேளாண்மை விரிவாக்க மையங்களும் கட்டப்பட்டுள்ளன, நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 2,863 விவசாயிகளுக்கு ரூ.1.31 கோடி இடுபொருள் மானியமாக வழங்கப்பட்டுள்ளதோடு, பல்வேறு உழவர் நலத்திட்டங்களில் ரூ.133.87 கோடி நிதி செலவில் 3லட்சத்து 32 ஆயிரத்து 556 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் துவரை சாகுபடி பரப்பு விரிவாக்க இயக்கம் மற்றும் துவரை உற்பத்தி விரிவாக்க திட்டத்தின் மூலம் 15,181 எக்டேர் பரப்பளவில் துவரை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் கிடைக்கப்பெறும் உபரிநீரை, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வறண்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் நிரப்புவதற்கான, தர்மபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகளிடமிருந்து பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. இந்த கோரிக்கைகளைப் பரிசீலித்து, பென்னாகரம் வட்டத்தில் உள்ள நெருப்பூர் அருகே, காவிரி உபரிநீரை எடுத்துப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து நீர்வளத்துறை ஆராய்ந்து வருகின்றது.
காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில், காவிரி நதியின் உபரிநீரைப் பயன்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் குறித்து, பல்வேறு நிலைகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கக்கூடிய சூழ்நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் பாதிக்கப்படாத வகையில் இந்த கோரிக்கையைச் செயல்படுத்துவது குறித்து சட்டப்பூர்வமாக ஆராய்ந்து இதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உறுதியாக எடுக்கும். இவ்வாறு தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.
The post வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விவசாயிகளின் நலன் பாதிக்காத வகையில் தர்மபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.