வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.2 கோடி பேரம்; அமலாக்கத்துறை உதவி இயக்குனர் மீது வழக்கு: தொழிலதிபரை மிரட்டி பணம் வாங்கிய 3 பேர் கைது
திருவனந்தபுரம்: அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.2 கோடி பேரம் பேசி கொல்லத்தைச் சேர்ந்த தொழிலதிபரிடமிருந்து ரூ.2 லட்சம் வாங்கிய சம்பவத்தில் 3 பேரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். இவர்களுடன் கொச்சி அமலாக்கத்துறை உதவி இயக்குனருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரையை சேர்ந்த ஒரு முந்திரி தொழிற்சாலை அதிபருக்கு கடந்த வருடம் கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து சம்மன் வந்தது. அதில், போலி ஆவணங்கள் மூலம் பெருமளவு பணம் வெளிநாட்டில் முறைகேடாக முதலீடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அவர் கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
அப்போது, பல வருடங்களுக்கு முன்புள்ள ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் பிறகு சில நாட்கள் கழித்து அமலாக்கத்துறை அலுவலக ஏஜென்ட் என்று கூறி வில்சன் என்பவர் அந்த தொழிலதிபரை போனில் தொடர்பு கொண்டார். வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றால் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி கொடுக்க வேண்டும் என்றும், முன்பணமாக ரூ.2 லட்சத்தை தன்னுடைய கையில் தரவேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அந்த தொழிலதிபர் எர்ணாகுளம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் திட்டத்தின்படி ரூ. 2 லட்சம் பணத்தை வாங்க வந்த வில்சனை (36) லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.
இவர் கொச்சி தம்மனம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவரிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் கொச்சியில் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முரளி முகேஷ் (54) மற்றும் ஆடிட்டர் ரஞ்சித் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் கொச்சி அமலாக்கத்துறை உதவி இயக்குனரான சேகர் குமார் என்பவருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இவர் மீதும் எர்ணாகுளம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் சேர்ந்து இதுபோல் பலரை மிரட்டி பணம் பறித்திருக்கலாம் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் கருதுகின்றனர்.
The post வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.2 கோடி பேரம்; அமலாக்கத்துறை உதவி இயக்குனர் மீது வழக்கு: தொழிலதிபரை மிரட்டி பணம் வாங்கிய 3 பேர் கைது appeared first on Dinakaran.