வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானத்திற்கு தடை - சென்னை ஐகோர்ட்டு

2 hours ago 2

சென்னை,

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை அமைந்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கி சர்வதேச மையம் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டன.

இதற்கிடையே, சத்தியஞான சபை பெருவெளியில் பக்தர்களின் வழிபாட்டுக்கு இடையூறாக சர்வதேச மையத்தை அமைக்கக்கூடாது என்றும், வேறு இடத்தில் கட்டடம் கட்டவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. கட்டிடம் கட்ட ஆதரவாகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வள்ளலார் கோவிலின் பின்புறம் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கவும், கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தில் முதியோர் இல்லம், சித்த மருத்துவமனை உள்ளிட்ட கட்டுமானங்கள் மேற்கொள்ளும் வகையில், விவசாய நிலத்தை வகை மாற்றம் செய்து வழங்கிய அனுமதிகளை எதிர்த்து புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த புதிய மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, சட்ட விதிகளைப் பின்பற்றாமல் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளதால், கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், அனைத்து அனுமதிகளும் விதிமுறைகள்படி பெறப்பட்டுள்ளதால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அறநிலையத் துறை தரப்பிலும், வள்ளலார் கோவில் சார்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "தமிழ்நாடு நகரமைப்பு சட்ட விதிகளின்படி, விவசாய நிலத்தை விவசாயமில்லாத பிற பயன்பாட்டுக்கு வகை மாற்றம் செய்வது தொடர்பாக, நகரமைப்பு துறை உதவி இயக்குநர், வேளாண் துறை இணை இயக்குநர் மற்றும் மாவட்ட கலெக்டரின் தடையில்லா சான்று அல்லது அறிக்கைகளை பெற்ற பிறகே நகரமைப்பு துறை இயக்குநர் ஒப்புதல் அளிக்க முடியும். ஆனால், இந்த விதிகளுக்கு முரணாக, வள்ளலார் கோவிலின் பின்புறம் கட்டுமானம் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக வேளாண் துறை உதவி இயக்குனர் அறிக்கை அளிப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பு, வகை மாற்றம் செய்து நகரமைப்பு இயக்குநர் உத்தரவிட்டுள்ளதால், அந்த பகுதியில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது" என்று உத்தரவிட்டனர்.

அதேசமயம், கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தை வகைமாற்றம் செய்வது தொடர்பாக நகரமைப்பு இயக்குனர் விதிகளின்படி ஒப்புதல் வழங்கியுள்ளதால், அங்குக் கட்டுமான பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்றும் அங்கு பணிகளை தொடரலாம் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Read Entire Article