வளம் கொடுக்கும் வான்கோழி!

3 months ago 27

கன்னியாகுமரி மாவட்டம் பெத்தேல்புரம் படுவர்கரையை சேர்ந்த மனோவுக்கு வெளிநாட்டில் வேலை. ஒரு மாதம் வேலை இருந்தால் அடுத்த ஒரு மாதம் விடுமுறை. இந்த விடுமுறை காலத்திற்கு வீட்டுக்கு வந்தால் பயனுள்ள வகையில் ஏதாவது செய்யலாமே என யோசித்து வான்கோழி வளர்ப்பிற்கு வந்திருக்கிறார். இப்போது அந்தத் தொழில் அவருக்கு அடையாளமாகவே மாறி இருக்கிறது. “ ஒருமுறை விடுமுறையில் வந்தபோது வீட்டின் அருகே உள்ள ஒரு ஏக்கர் தென்னந்தோப்பில் வான்கோழி வளர்க்க விரும்பினேன். கடந்த 2011ம் ஆண்டு தோட்டத்தில் உள்ள புற்களை அகற்றுவதற்காக 10 வான்கோழிக் குஞ்சுகளை நானும், எனது தந்தையும் வாங்கி வளர்த்தோம். அந்தக் குஞ்சுகள் அனைத்தும் இறந்து விட்டன. பின்னர் 30 வான்கோழிக் குஞ்சுகளை வாங்கினோம். இதில் 27 குஞ்சுகள் இறந்து விட்டன. 3 குஞ்சுகளை மட்டும் வளர்த்து வந்தோம். அப்போது வான்கோழி வளர்ப்பின் நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டேன். எனது தோட்டத்தில் வான்கோழிக் குஞ்சுகள் வளர்ப்பதற்கு கூண்டுகளை முதலில் அமைத்தேன். பின்னர் அவற்றில் சிறிய குஞ்சுகள், நடுத்தரமான வான்கோழிகள், பெரிய கோழிகள் என தனித்தனியாக அடைத்து வளர்த்து வருகிறேன். இதற்காக 10க்கு 15, 30 க்கு 12, 8 க்கு 10 என அடிக்கணக்குகளில் கூண்டுகள் அமைத்தேன். தினமும் இந்தக் கோழிகளை காலையில் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே கூண்டில் இருந்து திறந்து விடுவேன். அவை தோட்டத்தில் உள்ள புற்களை தீவனமாக எடுக்கும். பின்னர் மீண்டும் கூண்டுக்குள் அடைத்து விடுவேன். தற்போது என்னிடம் சுமார் 600 வான்கோழிகள் உள்ளன.

எந்த வகை உயிராக இருந்தாலும் தடுப்பூசி அவசியம். அதனால் வான்கோழிகள் குஞ்சுகளாக இருக்கும்போது தடுப்பூசி மட்டும் போடுவேன். ஒரு மாதம் வரை கோழிகளை நன்கு கவனிப்பது அவசியம். இந்தக் காலகட்டத்தில் இடித்த தீவனத்தைக் கொடுப்போம். இரண்டு மாதங்களுக்குப் பிறகு கோதுமைத்தவிடு, அவல் தவிடு, அரிசி உணவு, தேங்காய்ப் புண்ணாக்கு கொடுப்பேன். அரிசியை மட்டும் தீவனமாக 2 நாட்களுக்கு ஒருமுறை கொடுப்பேன். வான்கோழிகளுக்கு கோடை மற்றும் குளிர்காலத்தில் கழிச்சல் நோய் வரக்கூடும். இதுபோல் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும் வான்கோழிகளை, மற்ற கோழிகளில் இருந்து பிரித்து தனியாக வளர்ப்பேன். அந்தக் கோழிக்கு நோய் சரியாகும் வரை விற்பனைக்கு கொடுக்க மாட்டேன். அதுபோல் நடக்க முடியாமல் உள்ள வான்கோழிகளின் இறைச்சியையும் விற்பனை செய்ய மாட்டேன். அந்த கோழி கால்சியம் குறைபாட்டால் தான் நடக்க முடியாமல் இருக்கும், இதனை சரிசெய்ய கால்சியம் டானிக் கொடுப்பேன். நல்ல ஆரோக்கியமான முறையில் இருக்கும் கோழிகளை மட்டுமே இறைச்சிக்காக விற்பனை செய்கிறேன். இயற்கை உணவுகள் போட்டு வான்கோழி வளர்ப்பதால், கோழி 4 கிலோ முதல் 8 கிலோ வரை வளர்கிறது. வான்கோழியை உயிருடன் ஒரு கிலோ ரூ.335க்கும், உரித்த கோழி ரூ.530 எனவும் விற்பனை செய்கிறேன். இதனைத் தவிர டோர் டெலிவரியாக ஒரு கிலோ வான்கோழி ரூ.560 என விற்பனை செய்கிறேன். இந்த விலை மார்க்கெட் நிலவரத்தைப் போல் குறையும், கூடவும் செய்யும். இதனைத் தவிர முட்டை ரூ.20 என விற்பனை செய்கிறேன்.

கடந்த மாதத்தில் மட்டும் 110 கோழிகளை விற்பனை செய்தேன். இதில் கறிக்கோழியாக 80, உயிருடன் 30 என விற்பனை செய்தேன். இதில் உயிர்க்கோழியில் ரூ.60 ஆயிரம் வருமானமாக கிடைத்தது. கறிக்கோழியில் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் வருமானமாக கிடைத்தது. இதுபோக 100 வான்கோழிக் குஞ்சுகள் விற்பனை செய்தேன். ஒரு மாத வான்கோழிக் குஞ்சுகளை ரூ.200க்கு விற்பனை செய்ததில் ரூ.20 ஆயிரம் வருமானமாக கிடைத்தது. இதில் தீவனச் செலவு ரூ.1 லட்சம் போக ரூ.1.50 லட்சம் லாபமாக கிடைத்தது. இதுபோக மாதத்திற்கு 450 கோழி முட்டைகள் விற்பனை செய்வதன் மூலம் ரூ.9 ஆயிரம் கிடைக்கிறது. பண்டிகை காலங்கள், முகூர்த்த நேரங்களில் அதிகமாக கோழிகள் விற்பனை ஆகும். குஞ்சு பொரிக்க ஏற்ற முட்டையை ரூ.25க்கு விற்பனை செய்கிறேன். ஆனால் நான் வளர்க்கும் வான்கோழிகள் அதிகம் முட்டைகள் போடுவது இல்லை. வான்கோழிகளை 10 மாதத்தில் இருந்து அதிகபட்சமாக 14 மாதத்திற்குள் இறைச்சியாக விற்பனை செய்து விடுவேன். வாரத்தில் சனிக்கிழமை மட்டும் வெட்டி விற்பனை செய்கிறேன். மற்ற நாட்களில் மொத்தமாக வாங்குபவர்களுக்கு வழங்கி வருகிறேன். முன்பு நான் வான்கோழி வளர்த்து மொத்தமாக வியாபாரிகளுக்கு கொடுத்து விடுவேன். அப்படி கொடுக்கும்போது எனக்கு மொத்தமாக விலை கிடைத்துவிடும். தற்போது வியாபாரிகளுக்கு மொத்தமாக கொடுக்காமல், பொதுமக்கள் தேவைக்கு விற்பனை செய்து வருகிறேன்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
மனோ: 70924 70700.

 

The post வளம் கொடுக்கும் வான்கோழி! appeared first on Dinakaran.

Read Entire Article