வளங்கள் எல்லாம் தரும் வன துர்காதேவி

2 hours ago 3

இந்த உலகம் வானத்தை நம்பியும் மழையை நம்பியுமே இருக்கிறது. வனத்தின் காரணமாகத்தான் மழை பெய்கிறது. வனத்தினால் தான், காற்றில் ஏற்படும் மாசு சுத்தம் செய்யப்படுகிறது. வனத்தில்தான், உலகை காக்கும் அரிய மூலிகைகள் இருக்கிறது. ஒரு உயிர் பூமியில் வாழ அத்தியாவசியமான பிராண வாயுவை தந்து உதவுவது வனம்தான். இப்படி உலகையே தனது மடியில் வைத்து காக்கும் வனத்தினுடைய தேவிதான் வனதுர்கை. இந்த தேவியின் மகிமையை காண்போம் வாருங்கள்.

நவதுர்கையும் வனதுர்கையும்பக்தர்களின் துக்கத்தை போக்கும் தேவியாக விளங்கும் துர்காதேவிக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாக புராணங்கள் சொல்கிறது. சைலபுத்திரி, பிரம்மச்சாரிணி, சந்திரகண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனி, காளராத்ரி, மகாகௌரி மற்றும் சித்திதாத்ரி என்று துர்க்கையின் ஒன்பது வடிவங்களை மார்கண்டேய புராணம் சொல்கிறது.

“ஸ்ரீ வித்யாம்னாய கல்பம்’’ என்ற நூல், சூலினிதுர்கா, ஜாதவேதா துர்கா, சாந்திதுர்கா, சபரிதுர்கா, ஜ்வாலாதுர்கா, லவணதுர்கா, தீபதுர்கா, ஆசூரிதுர்கா மற்றும் வனதுர்கா என்று வேறு ஒன்பது விதமான துர்க்கையின் வடிவங்களை சொல்கிறது. இதை போலவே ஆகம நூல்கள் வேறு ஒரு நவதுர்கைகளின் பட்டியலை தருகிறது. ஸ்கந்தபுராணம், காரண ஆகமம் முதலிய நூல்கள் மேலே நாம் கண்ட நவதுர்கை பட்டியலில் இடம் பெறாத வேறு ஒரு ஒன்பது துர்க்கையின் பட்டியலை தருகிறது.

இப்படி பல விதமான நூல்கள் பலவிதமான துர்க்கையின் வடிவங்களை சொல்கிறது. இந்த ஆகமங்கள் அனைத்தையும் படித்து, அந்த ஒவ்வொரு துர்க்கையின் மகத்துவத்தை புரிந்துகொண்டு, அந்த தேவியை பூஜித்து பேறு பெறுவதற்கு பல கோடி ஜென்மம் எடுத்தாலும் போதாது. ஒன்றாய் இருந்து, பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய் நின்ற அந்த தேவியின் பலப்பல வடிவங்களை பூஜித்தால் ஏற்படும் பலனை, வனதுர்கையை பூஜித்த மாத்திரத்திலேயே அடையலாம். புராணங்கள் ஆகமங்களில் கூறப்பட்ட அனைத்து வித துர்கை வடிவங்களும், அனைத்துவித தேவியின் வடிவங்களும் வனதுர்கைக்குள் அடக்கம்.

பொதுவாக, துர்காதேவிக்கு ஒன்பது ரூபங்கள் என்று சொல்வார்கள். இந்த ஒன்பது என்ற எண்ணை வடமொழியில் சொல்ல வேண்டும் என்றால் “நவ’’ என்று சொல்ல வேண்டும். இந்த நவ என்ற சொல்லை தலைகீழாக சொன்னால் நமக்கு கிடைப்பது “வன’’ என்ற சொல். ஆகவே நவதுர்கைகளும், வனதுர்கைக்குள் அடக்கம் என்றால் அது மிகையல்ல.

ஆதிசங்கரரும் வனதுர்கையும்

அந்த ஈசனின் அவதாரமாக பூமியில் தர்மத்தை நிலை நாட்ட அவதரித்தவர் ஆதிசங்கரர். 72 துர்மதங்களாக பிரிந்து இருந்த இந்து தர்மத்தை முறைபடுத்தி நிலை நாட்டிய பெருமை இவரையே சேரும். இவர் ஒரு முறை பிரம்மதேவரின் அவதாரமான மண்டன மிஸ்ரரை வாதத்தில் வென்று, சுரேஷ்வராச்சாரியர் என்ற பெயரில் தனது சீடராக ஆக்கிக்கொண்டார். அவரது மனைவியும் சரஸ்வதியின் அம்சமான உபயபாரதி தேவியை உலகின் நன்மையை கருதி உலகிலேயே நிலை பெற செய்ய வேண்டும் என்று எண்ணினார் சங்கரர்.ஆனால், கணவர் வாதில் வெல்லப்பட்ட உடனேயே, சரஸ்வதியாக சுயரூபம் கொண்டாள் உபயபாரதி தேவி.

பிரம்ம லோகத்துக்கு செல்ல எத்தனித்த சரஸ்வதி தேவியை பூ உலகின் நன்மையை கருதி பூ உலகிலேயே நிலையாக கோயில் கொள்ள வைக்க வேண்டும் என்று எண்ணினார் சங்கரர். கலைகளின் அதிபதியும், சர்வ வேதங்களின் வடிவமாக விளங்கும் சரஸ்வதி தேவியை யாரால் கட்டுப்படுத்த முடியும். அவளை யாராலும் அடக்க முடியாது இல்லையா. அப்போதுதான் சங்கரருக்கு ஒரு யோசனை வந்தது. மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரத்தை கொண்டு, சரஸ்வதி தேவியை கட்டி, பாரதத்தில் தென்பகுதிக்கு அவளை அழைத்து வந்து ஸ்ரீருங்கேரி என்ற புனித தலத்தில் சாரதாம்பாள் என்ற பெயரில் கோயில் கொள்ள செய்தார்.

இப்படி சரஸ்வதி தேவியையே கட்டிப் போட்டு பூமியில் தங்க வைத்த சக்தி வாய்ந்த மந்திரம் “வனதுர்கா’’ தேவியின் மந்திரம். அனைத்து மந்திரங்களையும் செயலிழக்க செய்து, அனைத்து மந்திரங்களையும் தன்னுள் இழுத்துக்கொள்ளும் சக்தி உடைய மந்திரம் வனதுர்கா தேவியின் மந்திரம்.

மார்க்கண்டேயரும் வனதுர்கையும்

மிருகண்டு முனிவர், பிள்ளைப் பேறு இல்லாமல் பல காலம் தவித்தார். ஆகவே வனதுர்கா பரமேஸ்வரியை எண்ணி தவமிருக்க ஆரம்பித்தார். வனதுர்காதேவியின் மூலமந்திரத்தை இடைவிடாது ஜெபித்து வந்து தவம் செய்துகொண்டிருந்தார். அவரது தவத்திற்கு மனம் கனிந்த வனதுர்கா தேவி, காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டாள். அன்னையை வணங்கி எழுந்த முனிவர், தனக்கு புத்திர பாக்கியம் அருளும்படி வேண்டினார். வேண்டுவோர் வேண்டுவதை எல்லாம் வேண்டியபடியே தரும் இயல்புடைய தேவி, முனிவருக்கு புத்திர பாக்கியம் தந்தார். அதுமட்டுமில்லை, முனிவரது மகன் சிரஞ்சீவியாக வாழ்வான் என்றும் ஆசி வழங்கினாள்.முனிவருக்கு பிறக்கப் போகும் மகன் சிவபூஜையில் நாட்ட முடையவனாக இருப்பான் என்றும், அந்த சிவபூஜையை கொண்டே காலனையே வென்று காலம் காலமாக மரணமில்லா பெருவாழ்வு வாழ்வான் என்று வரம் தந்து தேவி மறைந்தாள்.

வனதுர்கா தேவியின் அருளால் மிருகண்டு முனிவருக்கு பிறந்த மார்க்கண்டேய முனிவர், அம்பிகை சொன்னபடியே சிவபூஜை செய்து, தனது பதினாறு வயதில் உயிரைப் பறிக்க வந்த காலனை வென்று சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு இப்படி ஒரு பேற்றை தந்தது வனதுர்கா தேவியின் அருள்தான் என்றால் அது மிகையில்லை.

கம்பரும் வனதுர்காதேவியும்

கம்பரும் மிகப் பெரிய வனதுர்கா தேவியின் உபாசகர்தான். அம்பிகையின் அருளாலேயே அவர் தேன் ஒழுக கவிபாடினார். ஒருமுறை கடுமையாக கொட்டும் மழை. ஊரே வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தது. கொட்டும் மழையில் கம்பர் இருந்த ஓட்டு வீட்டின் கூரை வலுவிழக்க தொடங்கியது. அதை கண்ட கம்பர், வனதுர்கா தேவியே கதி என்று அவளை சரணடைந்து நிம்மதியாக உறங்கினார். மறுநாள் காலையில் எழுந்து பார்க்கையில், அவரது வீட்டின் மீது நெற்கதிர்களை கூரையக வேய்ந்து அவரை வனதுர்காதேவி காத்திருக்கிறாள் என்பதை உணர்ந்தார். அன்னையின் அருளை எண்ணி ஆனந்தக் கூத்தாடினார்.

இப்படி நெல்கூரை வேய்ந்து கம்பரை காத்த வனதுர்கா தேவியை இன்றும் கதிரா மங்கலம் என்ற திருத்தலத்தில் தரிசிக்கலாம். நெல் கதிர்களால் கூரை வேய்ந்து கம்பரை அம்பிகை காத்ததால் இந்த ஊருக்கு கதிராமங்கலம் என்ற பெயர் ஏற்பட்டது.

அகத்தியரும் வனதுர்காதேவியும்

அகத்தியர், ஈசனின் திருமணக்கோலம் காண ஒரு முறை தெற்கு நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது வானளவு வளர்ந்திருந்த மலை அவரது பயணத்தை தடுத்தது. உடன் அந்த இடத்திலேயே வனதுர்கா மந்திரத்தை ஜபித்தபடி தவத்தில் ஆழ்ந்தார். வனதுர்கா தேவியின் அருளால் மலையைவிட பெரிய அளவில் உயர வளர்ந்த அகத்தியர். தனது கையை மலையின் உச்சியில் வைத்து அழுத்த, அதனுடைய உயரம் குறைந்தது. அவரும் தடையில்லாமல் தெற்கு வந்து அய்யனின் திருமணக்கோலம் கண்டு இன்புற்றார். இப்படி அகத்தியர் அடைந்த பல தெய்வீக சக்திக்கு காரணம் வனதுர்கை என்றால் அதுவும் மிகையல்ல.

வனதுர்காதேவியும் கொற்றவையும்

வனம் என்றால் காடு என்று பொருள். துர்கம் என்றால் கோட்டை என்று பொருள். காட்டில் உள்ள கோட்டை இயற்கையாகவே பாதுகாப்பு மிகுந்தது. இவ்வாறு இயற்கையான பாதுகாப்பை தனது பக்தர்களுக்கு தந்து காப்பவளே வனதுர்கா தேவி. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் போற்றப்படும் கொற்றவை என்னும் அம்பிகையின் வடிவம் இந்த வனதுர்காதேவியின் உடையதே என்பது அறிஞர் பெருமக்களின் முடிவான முடிவு.

வனதுர்காதேவியின் மகிமைகள்

சூரியன், சந்திரன், அக்னி இவை மூன்றும் அர்த்த பிரபஞ்சம் என்று சொல்லப்படும். அர்த்த என்றால் பாதி என்று ஒரு பொருள் உண்டு. அதாவது பிரபஞ்சத்தின் ஒருபாதி இவை மூன்றும். அதே போல, மனிதன் செவிகளில் கேட்கக்கூடிய ஒலி, கேட்க முடியாத ஒலி, உள்ளே ஒலிக்கும் தெய்வீக ஒலி என்று ஒலியை, பரா, பஷ்யந்தி, மத்யமா, வைகரீ என்று நால்வகையாக பிரிப்பார்கள். இந்த நால்வகை ஒலியும் சேர்ந்து உலகின் மற்ற ஒரு பாதியை கொடுக்கிறது.

இதற்கு சப்த பிரபஞ்சம் என்று பெயர். நாம் காணும் இந்த உலகம், ஒளியாலும் ஒலியாலும்தான் நிறைந்து இருக்கிறது. இதையே அர்த்த பிரபஞ்சம், சப்த பிரபஞ்சம் என்று சொல்கிறார்கள். இந்த சப்த பிரபஞ்சத்தையும் சரி, அர்த்த பிரபஞ்சத்தையும் சரி கட்டி காப்பவள் இந்த வனதுர்காதேவி. இந்த தேவியை முனிவர்கள் வனத்தில் வைத்து பூஜித்ததாலும், இவளை வனதுர்கா என்று அழைக்கிறார்கள். வனதேவி என்று அழைக்கும் வழக்கமும் உண்டு.

மேலும், இந்த தேவியின் சக்தி வாய்ந்த மந்திரத்தை, வனத்திலோ, அல்லது நெல்லி மரத்தின் அடியிலோ, அல்லது வன்னி மரத்தின் அடியிலோ ஜபம் செய்தால் விரைந்து பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அதனாலும் இந்த தேவியை வனதுர்கா தேவி என்று அழைக்கிறோம்.

வனதுர்க்கையின் அற்புத வடிவம்

வனதுர்கை எண் கரத்தவள். மகிஷன் தலையில் நின்றுகொண்டு, சங்கு, சக்கரம், கத்தி, கேடயம், அம்பு, வில், சூலம், தர்ஜனி முத்திரை ஆகியவற்றை கையில் தாங்கி கொண்டு விளங்குபவள். குங்குமம் போன்ற சிவந்த நிறத்தில் ஒளிர்பவள். வைரங்களாலும் நவமணிகளாலும் பதிக்கப்பட்ட கிரீடம் தரித்தவள். நீண்ட நாசியும், சிவந்த உதடுகளையும் கொண்டவள். தொங்கல்கள் அணியப்பெற்ற காதுகளையும், நீண்ட கருங்கூந்தலையும் உடையவள். தங்கவளையல்கள் அணியப் பெற்றதும் பல வகையான ஆயுதங்களை தரித்ததுமான கரங்களை உடையவள் என்று சில புராணங்கள் வர்ணிக்கிறது. தங்கத் தாமரையில் வீற்றிருப்பவள். முக்கண்ணி, மின்னலை போன்ற நிறம் உடையவள், சங்கு, சக்கரம், அபய, வரத முத்திரைகளை தாங்கும் கரமுடையவள். சந்திர கலையை தலையில் தரித்தவள். பலவிதமான ஆபரணங்கள் அணிந்து சிங்க வாகனத்தில் பவனி வருபவள் இவள் என்று அகத்திய புராணம் கூறுகிறது.

வனதுர்கா தேவியை பூஜிப்பதால் வரும் நன்மைகள்

சகல மங்கலங்களையும் தரும் இந்த தேவி, பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் தருகிறாள். அடியார்களின் மாயையை நீக்கி ஞானத்தை தருகிறாள். செல்வம் வேண்டி தொழுபவர்களுக்கு அளவில்லாத செல்வங்களை தருகிறாள். மற்றவர்களால் ஏவப்பட்ட பில்லி சூனியம் போன்ற உபாதைகளை நீக்குகிறாள். இப்படி வனதுர்கா தேவி அருளும் பேற்றுக்கு அளவே இல்லை. இந்த வனதுர்கா தேவி மந்திரத்திற்கு;

“கிராத ரூப தர ஈஸ்வர
ஆரண்யகர்தான் ரிஷி’’
அம்பிகையின் மந்திரத்தை வேடுவன் வடிவில் இருக்கும் ஈஸ்வரன் தான் உலகிற்கு தந்தார் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. வனதுர்கா தேவியின் மந்திரம், அனுஷ்டுப் சந்தஸில் இருக்கிறது. மந்திரத்திற்கு உரிய தேவதை கிராத ரூப ஈஸ்வரன் சகிதமாக இருக்கும் வனதுர்கை. இப்படி மகிமைகள் பல நிறைந்த வனதுர்கா பரமேஷ்வரியை எண்ணி, போற்றி, வணங்கி, கதிராமங்கலம் போன்ற தலங்களில் தரிசித்து வழிபட்டு, நல்ல கதியை அடைவோம்.

ஜி.மகேஷ்

 

The post வளங்கள் எல்லாம் தரும் வன துர்காதேவி appeared first on Dinakaran.

Read Entire Article