
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே வல்லம் கீழத் தெருவில் கன்னிகா பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று யாகசாலை பூஜைகளுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.
இன்று காலையில் யாக சாலை பூஜைகள் முடிவடைந்தன. தொடர்ந்து பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு, மங்கள வாத்தியம் மற்றும் சிவ வாத்தியம் முழங்க கோவில் வலம் வந்து விமான கலசங்களை அடைந்தன. பின்னர் சிவாச்சாரியார்கள், விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடத்தினர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர். மற்றும் வல்லம் கிராமவாசிகள் செய்திருந்தனர். செம்பனார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.