வல்லமை பெற்ற வாலவல்கியர்கள்!

3 months ago 21

நம் புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள், சங்க இலக்கிய காப்பியங்கள் போன்றவற்றில் குள்ளர்கள் பற்றிய செய்திகள் உள்ளன. ஆன்மிகம் என்பது, விஞ்ஞானத்தின் அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்பட்ட கருத்துகள் ஆகும். நம் முன்னோர்கள் காட்டிய வழியில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தமுண்டு. குள்ளர்கள், அறிவியல் சூழல்களை பின்னிப் பிணைந்துள்ளது.

வாலவல்கியர் யார்?

பிறருக்காக வாழக் கூடியவர்கள். ஒரே இடத்தில் சேர்ந்து கூட்டமாக இருப்பவர்கள். 60 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் பிறப்பு பற்றிய கதைகள் மிகவும் சுவாரசியமாக இருக்கும். சப்த ரிஷிகளில் ஒருவரான கிரது, கிரியை தம்பதியினரின் மகன்கள் என்றும், சிவபெருமான், பிரம்மன் ஆகியோர்களிடத்தில் தோன்றியவர்கள் என்றும், இன்னும் பற்பல செய்திகள் கூறப்பட்டாலும், இவர்கள் விஞ்ஞானத்தோடு தொடர்புடையவர்கள் என்பதுதான் உண்மை.

பாரதத்தில் வாலவல்கியர்

மகாபாரதத்தில் ஆதி பருவத்தில் ரிஷிகளின் வரலாறு மேம்படக் கூறப்பட்டு இருக்கிறது. இவர்களுக்கும் மகாபாரதத்துக்கும் என்ன சம்பந்தம்?…சம்பந்தம் இருக்கிறது. இம்முனிவர்களால்தான் திருமாலுக்கு மிகமிக முக்கியமான வாகன ஓட்டி கிடைத்துள்ளார் என்பது அரிய செய்தியாக உள்ளது.

காசியப முனிவர் நடத்திய வேள்வி

காசியப முனிவரின், வினத்தை – கத்ரு என்னும் இரு மனைவியர்களுக்கும் தங்களுக்கு குழந்தைகள் வேண்டும் என்று கணவனிடம் கேட்டனர். முனிவர் தன் மனைவியினரைப் பார்த்து நீங்கள் சிறந்த குழந்தைகள் பெற வேண்டும் என்றால், வேள்வியை நடத்த வேண்டும் எனக் கூறி ஓர் ஒப்பற்ற வேள்வியை நடத்தினார். அவ்வேள்விக்கு வேண்டிய பொருள்கள் பெறுவதற்கு தேவேந்திரன் உதவியை நாடினார். தேவேந்திரனும் உதவுவதாக வாக்களித்தார்.

தேவேந்திரன் காட்டை அழித்தான்

வேள்வி நடத்த மரக்கட்டைகள் தேவைப்பட்டது. ஒரு மலைக் காட்டில் உள்ள உயரமான மரங்களை எல்லாம் பெயர்த்து எடுத்து வந்தனர். அப்படி வருகின்ற பொழுது, வாலவல்கியர் ரிஷிகள், இலைகளை எல்லாம் பொறுக்கி எடுத்துக் கொண்டு, நடந்து வந்து கொண்டிருந்தார். மிகவும் குள்ளமாகவும், அந்த இலைகளை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு, அவர்கள் நடந்து வருகின்ற பொழுது பள்ளத்திலிருந்து நீர் அவர்கள் மேல் தெளித்தது. இதை கண்ட தேவேந்திரன் சிரித்தான்.

“யார் இப்படி எடுத்துக்கிட்டு கஷ்டப்பட சொன்னது. உங்களால் என்னத்த சாதிக்க முடியும். இவ்வளவு குள்ளமாக இருக்கும் உங்களால், இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து எப்பொழுது சேர்க்க முடியும். வேள்வி எல்லாம் முடிந்த பிறகா?’’ என்று நகைச்சுவையாக சிரித்தான். தேவேந்திரன் கேலி செய்ததை அவமானமாக கருதிய வால வல்கியர்கள், மனம் வெதும்பினர். உடனே அவர்கள், “உன்னால் மட்டும்தான் தேவலோகத்தை ஆள முடியுமா? தேவேந்திரா… உன் அழகின் மீது உனக்கு அத்தனை கர்வமா? பதவியின் மீது அத்தனை மோகமா? உன்னை உண்டு இல்லை என்று ஆக்குகிறேன் பார்’’ என்று அவர் சாபம் கொடுக்கும் நேரத்தில், காசிப முனிவர் இந்திரனை அழைத்தார்.

“தேவேந்திரா! பொறுமையை கடைப்பிடி. வாலவல்கிய முனிவர்கள் மிகவும் பலம் பொருந்தியவர். எதையும் சாதிக்கும் வல்லமை உடையவர்கள். நீ அவர்களை பகைத்துக் கொண்டு இருப்பது அத்தனை சிறப்பு உடையது அல்ல. அவர்களிடம் தற்பெருமை பேசுவது அதிகமாக வைத்துக் கொள்ளாதே, அவர்கள் தவத்தில் சிறந்தவர்கள். முனிவர்கள் வாக்கும், சாபமும் கொடுத்தால், நீ அழிந்து விடுவாய்’’ என்றுகூறி முனிவர்கள் பற்றிய செய்திகளை விளக்கினார்.

சூரியனின் நெருங்கிய நண்பர்கள் வாலவல்கியர்கள்

இவர்கள், சூரியனின் கதிர்வீச்சுகளைக் குடித்து உயிர்தாங்கி, சூரிய பிராந்தியத்தைச் சுற்றித்திரியும் ஆற்றல் கொண்டு வாழக் கூடியவர்கள். சூரியக் கதிர்கள், காலை முதல் அந்தி சாயும் வரை சூரியனைச் சுற்றி வரக் கூடியவர்கள். இதனால், இக்கதிர்கள் வீச்சால் பூமியில் அதிக பாதிப்பும் இல்லாமல் வெப்பத்தை இவர்கள் வாங்கிக் கொள்கிறார்கள்.
இவர்கள் பாம்புகளை உணவாக உட்கொள்வர். எனவே உருவத்தைக் கண்டு எள்ளி நகையாடாதே, இவர்கள் குள்ளமாக இருந்தாலும், பிரம்மாண்டமான கீர்த்தி பெற்றவர்கள்.
இவர்கள் நினைத்தால் எதையும் சிருஷ்டிக்கும் வல்லமை படைத்தவர்கள்.

ஆகவே, அவரிடம் சாபத்தைப் பெறாமல் வரத்தைப் பெற்று வாழ்வதே சிறந்த வழியாகும்’’ என எடுத்துக் கூறினார். இதைக் கேட்ட இந்திரன், வாலவல்கியரை பணிந்து வணங்கி, தான் செய்த தவற்றை மன்னிக்கும் படி கேட்டார். “உன்னை அழிப்பது என்பது உறுதி. முதலில் உன் அகந்தையை அழிக்க எதிரி ஒருவன் தோன்றுவான். பின்பு நண்பனாக மாறுவான்’’ எனக் கூறிவிட்டு, காசிப முனிவரை பார்த்து, “நீ.. இந்திரனுக்கு இணையான ஒரு தலைவனை உண்டாக்க வேண்டும்’’ என்ற கட்டளை இட்டு, தவம் செய்ய இமயமலைக்கு சென்றனர்.

காசிப முனிவர் யாகம் செய்து, அதன் மூலம் சக்தியைப் பெற்று, கத்ருக்கு நாகவம்சத்தையும், வினதைக்கு பறவைகள் இனமான இரண்டு குழந்தைகளையும் கொடுத்தார். அதில் வினதை என்பவள் சிறப்பு மிக்கவளாக விளங்கினாள். வினதையின் இரு குழந்தைகள் பெருமையை அறிந்த கத்ரு, அவளை ஏமாற்றி அடிமைப்படுத்த விரும்பினாள். அதற்கான தக்க சமயத்தை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

அதற்கான நேரம் வந்தது. தேவர்கள், அசுரர்கள் இணைந்து பாற்கடலை கடைந்த பொழுது, கடலில் இருந்து தோன்றிய உச்சைச்சிரவம் என்ற வெண்மை நிறம் கொண்ட குதிரையை, இந்திரன் எடுத்துக் கொண்டான். அக்குதிரை, ஒரு சமயம் இந்திரனின் உச்சைச்சிரவம் குதிரை, வானத்தில் பறந்தது. அதை கண்ட வினதை, ஆச்சரியத்துடன் வியந்து நோக்கினாள். அவள் வியப்பை கண்ட கத்ரு, தந்திரமாக அவளை அடிமைப்படுத்த எண்ணினாள். ஆகையால், தேவையில்லாதப் பேச்சைக் கொடுத்து, “உனக்கும் எனக்கும் ஒரு போட்டி வைத்துக் கொள்வோம். நான் வெற்றி பெற்றால், நீ உன் தோல்வியை ஒப்புக்கொண்டு எனக்கு அடிமை ஆக வேண்டும். நீ வெற்றி பெற்றால், நான் உனக்கு அடிமை’’ என்றாள்.

போட்டியின் விதிமுறை, ஒப்பந்தத்தின் படி, இருவரும் போட்டியில் பங்கேற்றனர். “அக்குதிரையின் வால் என்ன நிறம்?’’ என்று கேட்டாள் கத்ரு. “வெண்மை நிறம்’’ எனக் கூறினாள் வினதை. “இல்லை. வெண்மை இல்லை. அது கருப்பு’’ எனக் கூறினாள் கத்ரு. “கருப்பா? இல்லையே. வெண்மைதான்’’ என்று வினத்தை தயக்கத்துடன் கூறினாள். “வெண்மையா? கருப்பா?’’ என்பதை அறிய பொதுவான சாட்சிகளை அழைத்து வர, “உச்சைச்சிரவம் குதிரை கருப்பா? வெண்மையா?’’ என்று கேட்டாள். வந்தவர்கள், அது கருப்புதான் என்று கூறிவிட்டு சென்றனர்.

வெண்மை எவ்வாறு கருப்பானது?

தன்னுடைய கரு நாகங்களை அந்த வாலில் மட்டும் நன்றாக சுற்றிக் கொள்ளும்படி கூறினாள். தன் தந்திரத்தால் வினதையை அடிமையாக்கினாள். அதன் பின்பு, வினதை அவளுக்கு பணிவிடை செய்துச் செய்து துவண்டு போனாள். அன்னையின் துயரத்தைக் கண்ட இரு மகன்களான அருணன், வைநதேயன் ஆகியோர் வருந்தினர். அப்படி இருக்கின்ற சமயத்தில், வைநதேயன் அன்னையை துன்புறுத்திய பெரியம்மா கத்ருவிடம் இருந்து மீட்டெடுக்க விரும்பினான். தாயின் வேதனை அறிந்து விடுதலை கிடைக்க செய்ய வேண்டும் என்று எண்ணினான் வைநதேயன். தன்னுடைய பெரியம்மாவிடம் சென்று, “என் அன்னையை நீங்கள் விடுதலை செய்ய வேண்டுமென்றால், நான் என்ன செய்ய வேண்டும்’’ என்று கேட்டான், வைநதேயன்.

கத்ரு, வைநதேயனை அலட்சியமாக பார்த்து, “நீ தேவலோகத்திலேயே இருக்கின்ற அமிர்தக் கலசத்தைக் கொண்டு வந்து எனக்குக் கொடுத்தால், நான் உன்னுடைய அன்னையை விடுதலை செய்கிறேன். நீ உன் அன்னையை அழைத்துச் செல்லலாம். நான் யாதொரு தடையும் சொல்ல மாட்டேன். இதுதான் ஒப்பந்தம்’’ என்றாள்.

பசிக்கு உணவு யானையும், ஆமையும்?

கத்ரு பேச்சைக் கேட்டுக் கொண்டு, தன்னுடைய பருத்த உடலை நெடிதான உருவத்தை எடுத்த வைநதேயன், இந்திரலோகத்தை நோக்கி புறப்பட்டான். பசித்தால் உணவு உண்ண வேண்டும் என்பதற்காக பெரிய யானை மற்றும் பெரிய ஆமையை தன் கால் விரல்களுக்கிடையில் தூக்கிக் கொண்டு வானில் பறந்தான். அக்காட்சியைக் கண்ட முனிவர்கள், ரிஷிகள், தேவர்கள், மும்மூர்த்திகள் என அனைவரும் வியந்து நோக்கினர்.

வைநதேயன் பறக்கும் பொழுது, காற்றின் வேகத்தால் மரங்கள் அதிர்ந்து பள்ளத்தாக்கில் கீழே விழ இருந்தது. இக்காட்சியைக் கண்ட வைநதேயன், உடனே அம்மரத்தை தன் அலகினால் கவ்விக் கொண்டு பறந்தான். இதனால் வாலவல்கியர் காப்பாற்றப்பட்டனர், இவர்களை எங்கே கொண்டு போடுவது என்று சிந்தித்து பறந்து கொண்டே சென்றவன், கந்தமாந்தன் என்ற மலைச்சாரலை அடைந்தான்.

அங்கே, தந்தை காசியப முனிவர் தவம் செய்து கொண்டிருந்தவர், அப்பொழுதுதான் விழிகளை திறந்தார். தன்னுடைய மகன் ஒரு காலில் யானையும், மற்றொரு காலில் ஆமையையும் பிடித்து, அலகில் வாலவல்கியர்கள் தலைகீழாக தூக்கிக் கொண்டு பறந்து வரும் காட்சியை கண்டவுடன் பதறிவிட்டார்.

இவர்கள் சாபம் கொடுத்தால், என்னாகும் என்று அதிர்ந்தார். “மகனே நீ அவர்களை விட்டுவிடு நல்லகுணத்தவர்கள்தான் முனிவர்கள்’’ என்றார். பின்பு, வாலவல்கியர் பக்கம் திரும்பி, “வாலவல்கிய தவமுனிவர்களே! இவன் ஏதோ அறியாமல் தவறு செய்துவிட்டான். மன்னிக்கவும் என கேட்டுக் கொண்டார். வைநதேயன் நற்காரியத்தைப் புகழ்ந்த வாலவல்கியர்கள், “எங்கள் அருள் ஆசியால் பிறந்தவன் வைநதேயன். இன்று முதல் கருடன் என்று பெயர் சூட்டுகின்றோம். லோக சேமத்திற்காக பிறந்தவன்’’ என்று வாழ்த்தினார்.

இந்திரலோகத்தை நோக்கிகருடன் என்றால் சுமையை தூக்கக் கூடியவன் என்று பொருள்படும். “ஆக எத்தகைய சுமையையும் தாங்கக் கூடிய வல்லமை படைத்த கருடன் வாழ்க..! வாழ்க..!’’ என்று அனைவரும் வாழ்த்தினர். மக்கள் இவரை போற்றி துதிப்பார்கள் என்று அருளாசி வழங்கினர். வாலவல்கியரை பனி முடிய சிகரங்களுக்கு அருகே இருக்கின்ற குகையில் தவம் செய்ய அவர்களை வைத்துவிட்டு, பின்பு அங்கே அமர்ந்து யானையையும் ஆமையையும் புசித்தான் கருடன். பின்பு, அங்கிருந்து, இந்திரலோகத்தை நோக்கி புறப்பட்டான்.

கருடன் வருவதற்கு அறிகுறியாக இந்திரலோகமே கிடுகிடுத்தது. நாற்புறமும் தென்றல் வீச வேண்டிய இடத்தில், புயற்காற்று வீசியது. இத்தகையக் கொடிய ஒரு தீய அபசகுனத்தை எதிர்பார்க்காது நடுநடுங்கி என்ன நடக்கப் போகிறதோ என பதறினர். அதே நேரத்தில், இந்திரனின் வஜ்ராயுதமானது அச்சத்தால் நடுநடுங்கி கிடுகிடுத்ததைக் கண்டான், இந்திரன். “வஜ்ராயுதமே! யாரைக் கண்டு இவ்வளவு நடுங்குகிறாய்’’ என இந்திரன் கேட்டதும். “தேவேந்திரா! உன்னிடமிருந்து அமிர்தத்தை எடுத்து செல்ல உன்னைவிட வலிமை மிக்கவன் உன்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றான். அமிர்தத்தை நீ எப்படி காப்பாற்ற போகிறாய்?’’ என்று வஜ்ராயுதம் சென்னது. செய்வது தெரியாமல் திகைத்தான் இந்திரன். கருடன் வந்தான் இந்திரனுடன் போர் செய்து வென்று, அந்த அமுதகலசத்தை எடுத்துக் கொண்டு, கீழே இறங்கி வேகமாக சென்றுக் கொண்டிருந்தான்.

அச்சமயம், அவனை பின் தொடர்ந்து வந்த இந்திரன், “சற்று நில் கருடா! நான் கூறுவதைக் கேள். நீ நல்லவர்கள் இடத்தில் அமுதத்தை கொடுத்தால் பரவாயில்லை. நீ கொண்டு சென்று கொடுக்கக் கூடியவர்கள் எத்தகையவர்கள் என்று சிந்திப்பார். நான் உன்னை தடுக்கவில்லை. எடுத்து செல். ஆனால் ஒன்று மட்டும் உன்னை கேட்டுக் கொள்கிறேன். நீ உன் பெரியம்மாவிடம் கொடுக்கும் பொழுது, அவர்களுடைய மகன் குளித்த பின்புதான் இந்த அமிர்தத்தை பருக வேண்டும் என்று கூறு, மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என இந்திரன் கூறினான்.

இந்திரன் சொல்வதிலும் ஏதோ ஒரு அர்த்தம் உள்ளதாக நினைத்து அவ்வாறே கருடன், கலசத்தை எடுத்துச் சென்று, பெரியம்மா கத்ருவிடம் கொடுத்தான். தேவேந்திரன் கூறியதைபடி செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு, தன் அன்னை வினதையை விடுதலை செய்து அழைத்துச் சென்றான். கத்ரு, தன் மகன்களை நீராடி திரும்பி வர சொல்லிவிட்டு, அமுதகலசத்தை புல்லின் மீது வைத்துவிட்டு சென்றாள்.

அமிர்தகலச துளிகள்

இந்திரன், அமுதகலசத்தை எடுத்து கொண்டு இந்திரலோகம் நோக்கி சென்றான். அமுதகலசம் விண்ணில் பறப்பதை கண்ட கத்ரு, பதட்டத்தில் “நான் ஏமாந்து போனேன்… ஏமாந்து போனேன்’’ என கத்தினாள். அதே சமயம், குளித்து வந்த நாகங்கள் புல்லில் இருந்த அமிர்தத் துளிகளை நாக்கால் ஸ்வீகரிக்க, நாகங்களின் நாக்கு இரண்டாக பிளவு ஏற்பட்டது.
பாம்பிற்கு இரு நாக்கு இருப்பதற்கு காரணம், கருடன் கொண்டு வந்த அமுதகலசத்தின் துளியினால் ஏற்பட்டதுதான். வாலவல்கியர்கள் “அல்ட்ரா வயலட்’’ என்ற ஒளி கதிர்வீச்சை தாங்கக் கூடியவர்கள் என சிலப்பதிகாரத்தில், “வேட்டுவ கதையில் சுடரோடு திரிதரும் முனிவரும் சுடரோடு கொட்டும் அவிர்சடை முனிவரும்’’. என்ற பாடலில் அறியலாம்.

பொன்முகரியன்

The post வல்லமை பெற்ற வாலவல்கியர்கள்! appeared first on Dinakaran.

Read Entire Article