அரசியல் சாசனத்தின் தந்தை என்று போற்றப்படும் அம்பேத்கரை நாட்டின் உள்துறை அமைச்சர் பதவி வகிக்கும் அமித்ஷா மாநிலங்களவையில் அவதூறாக பேசியுள்ளார். அம்பேத்கர் என்று முழங்குவது தற்போது பேஷனாகி விட்டது. அதற்கு பதில் கடவுள் பெயரை உச்சரித்திருந்தால் சொர்க்கத்தில் இடமாவது கிடைத்திருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். இவரது பேச்சுக்கு தற்போது நாடு முழுவதும் கண்டனம் வலுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் திமுக சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விடுதலை சிறுத்தை கட்சி, காங்கிரஸ் கட்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இவர்கள் போராட்டத்துக்கு எதிராக பாஜ உறுப்பினர்கள் போட்டி போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.
அரசியல் சாசனம் என்ற அஸ்திவாரத்தின் மீது தற்போது நாடு இயங்கி வருகிறது. அனைவருக்கும் சம உரிமை என்று அரசியல் சாசனத்தில் எழுதி ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுத்து பல்வேறு அதிகாரங்களில் இன்று இருப்பதற்கு முக்கிய காரணம் அம்பேத்கர் ஆவார். அவரது புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசியிருப்பதால் அவரது முகத்திரை மட்டுமல்ல பாஜவின் முகத்திரையும் கிழிந்து உண்மையான முகம் வெளியே தெரிய வந்துள்ளது.
அமித்ஷாவின் பேச்சை நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டித்துள்ளனர். ‘அரசியலமைப்பை உருவாக்கிய மாமனிதர் மீது பாஜவின் மனநிலையை உங்கள் பேச்சால் மக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள். பாஜவினர் மோடி, மோடி என்று கூறுவதற்கு பதில் கடவுள் பெயரை கூறியிருந்தாலும் சொர்க்கம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் நினைவை எந்த அளவுக்கு குறைக்க பாஜ திட்டமிடுகிறது என்பதை அறிந்துள்ளோம். சூரியனும், சந்திரனும் உள்ளவரை அம்பேத்கர் இருப்பார்.
அவரது கொள்கைகள் வாழும். அம்பேத்கர் இந்த மண்ணில் பிறக்காமல் இருந்திருந்தால் பலர் முக்கிய பதவிகளில் அமர்ந்திருக்க முடியாது. அமித்ஷா உள்துறை அமைச்சராகி இருக்க முடியாது. மோடி பிரதமராகி இருக்கமுடியாது. அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வை தான் நம்மை உயர்த்தி இருக்கிறது என்று தலைவர்கள் குறிப்பிட்டுள்ளார். அதிக பாவங்கள் செய்தவர்கள் தான் பாவ, புண்ணியம் குறித்து கவலைப்பட வேண்டும். நாட்டையும், மக்களையும், அரசியல் சாசன பாதுகாப்பு குறித்து கவலைப்படுபவர்கள் அம்பேத்கரின் பெயரை தான் சொல்வார்கள் என்று அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கரை இழிவுபடுத்தி அரசியலமைப்பு சட்டத்தையே மதிக்காமல் பாஜவினர் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி தான் இது என்று அரசியல் விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய தொனி நையாண்டி செய்வதாக இருந்ததால் அமித்ஷாவுக்கு எதிராக மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அம்பேத்கரை அவதூறாக பேசியது அமித்ஷாவுக்கு மட்டுமல்ல, மோடி அரசுக்கே பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
The post வலுக்கும் கண்டனம் appeared first on Dinakaran.