வறண்ட பூமியில் வருவாயை அள்ளித் தரும் முருங்கைக்காடு!

4 weeks ago 9

சமீப நாட்களாக முருங்கைக்காயின் விலை அதிகமாக இருப்பதால் முருங்கை விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இது மழைக்காலம் என்பதால் முருங்கையின் வரவு குறைவாக இருப்பதால் வெளி மாநிலங்களில் இருந்து முருங்கைக்காய் கொண்டுவரப்படுகிறது. இந்த சமயத்தில் முருங்கையைப் பற்றியும் அதன் விளைச்சல் முறையைப் பற்றியும் தெரிந்துகொள்ள, நெல்லை சாத்தான் குளத்திற்கு அருகில் உள்ள பேய்க்குளம் பகுதியைச் சேர்ந்த முருங்கை விவசாயி முருகேசனை தொடர்புகொண்டோம். அவரோடு உரையாடியபடியே அவரது முருங்கைத் தோட்டத்தைப் பார்வையிட்டோம்.

“ எங்கள் பகுதி வறட்சியான பகுதி. ஆனாலும் பல தலைமுறையாக விவசாயம்தான் இங்கு பிரதான தொழில். நெல், வாழை, கடலை, பருத்தி என பலவிதமான பயிர்களை தாத்தா காலத்தில் இருந்தே பயிரிட்டு வருகிறோம். சிறுவயதில் இருந்தே விவசாயம்தான் எனக்கும் தொழில் என்பதால் இதில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அதனால், முருங்கையைப் பயிரிடலாம் என முடிவெடுத்து கடந்த 10 ஆண்டுகளாக முருங்கை விவசாயம் செய்து வருகிறேன்.

முருங்கையைப் பொருத்தவரை ஒருமுறை நடவு செய்தால் சராசரியாக 10 ஆண்டுகள் வரை பயன்பெறலாம். அந்த வகையில் நான் அதிக விளைச்சல் தரும் வெவ்வேறு ரகங்களைப் பயன்படுத்தி வருகிறேன். தற்போது 6 ஏக்கரில் கறுப்பு முருங்கை பயிரிட்டிருக்கிறேன். முருங்கையில் பொதுவாக ஒரு வருடத்திற்கு நான்கு சீசன். அதாவது மூன்று மாதத்திற்கு ஒருமுறை முருங்கையில் இருந்து காய் பறிக்கலாம். நாட்டு முருங்கை நடும்போது அதிக இடைவெளி தேவைப்படும். நான் கரும்பு முருங்கை பயிரிட்டிருப்பதால் 15க்கு 15 என்ற அடிக்கணக்கில் ஒரு ஏக்கருக்கு 160 முருங்கை நட்டிருக்கிறேன். இந்த கரும்பு முருங்கையை திண்டுக்கல்லில் இருந்து ஒரு செடி ரூ.28க்கு வாங்கி வந்தேன். முருங்கையைப் பொருத்தவரையில் ஈரம் பார்த்து நீர் கொடுக்க வேண்டும். எங்கள் பகுதி களிமண் பகுதி என்பதால் தினமுமே நீர் கொடுத்து வருகிறேன். முருங்கைச் செடியை நட்டபிறகு சரியாக
100வது நாளில் இருந்து காய்கள் காய்க்க தொடங்கிவிடும். ஆரம்பத்தில் குறைவான அளவில் காய்கள் காய்த்தாலும் அடுத்தடுத்த சீசனில் அதிகளவு காய்கள் காய்க்கத் தொடங்கிவிடும்.

ஒரு சீசனில் ஒரு ஏக்கருக்கு சராசரியாக 10 டன் வரை முருங்கைக்காய் அறுவடை செய்யலாம். அப்படிப் பார்த்தால் சராசரியாக 6 ஏக்கரில் இருந்து 50 டன் முருங்கையை ஒரு சீசனுக்கு அறுவடை செய்து விற்பனை செய்கிறேன். குறைந்தபட்சமாக பார்த்தாலும் கூட வருடத்திற்கு 200 டன் வரை மகசூல் கிடைக்கிறது. முருங்கையில் எந்தளவிற்கு விளைச்சல் எதிர்பார்க்கிறோமோ அதேயளவு பராமரிப்பும் செய்ய வேண்டும். பூக்கள் அதிகளவு பூப்பதற்கு, நிறைய காய்கள் பருமனாக வளருவதற்கு என சரியான நேரத்தில் உரம் கொடுக்க வேண்டும். இயற்கைமுறை உரம் மற்றும் செயற்கை உரங்களையும் கொடுத்து முருங்கையை வளர்க்கலாம்.

தற்போது பலரும் டிஐபி, யூரியா, பொட்டாசியம், உள்ளிட்ட உரங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், நான் இயற்கை முறையிலும் முருங்கை விவசாயம் செய்து வருகிறேன். எனது மகன் பி.இ என்ஜினியரிங் படித்துவிட்டு தற்போது என்னோடு முருங்கை விவசாயம்தான் செய்துவருகிறார். வாரம் ஒருமுறை முருங்கைக்கு பழக்கரைசல், பத்திலைக் கரைசல், மீன் அமிலம் என அனைத்தும் அவரே தயார் செய்து முருங்கைக்கு தெளித்துவருகிறார். இதனால், பூச்சி தாக்குதல் குறைந்து காய்கள் நன்றாக பருமன் அடைகிறது. எங்கள் பகுதியில் விளையும் முருங்கைக் காய்களை அதற்கென உள்ள கொள்முதல் வியாபாரிகள் நேரடியாக வந்து மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள். இதனால் எங்களுக்கு சந்தைப்படுத்தும் வேலை மிச்சமாகிறது’’ என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

– தொடர்புக்கு: முருகேசன்: 94434 52105..

சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதிகள் பொதுவாக வானம் பார்த்த பூமியாக விளங்குபவை. குளம் மற்றும் கிணறுகளில் உள்ள குறைந்தளவிலான தண்ணீரைக் கொண்டு இங்கு வெள்ளாமை நடந்து வருகிறது. தற்போது அந்தப் பகுதியில் முருங்கை சாகுபடி அதிகரித்து வருவதால் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க அரசு சார்பில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதனால் முருங்கை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post வறண்ட பூமியில் வருவாயை அள்ளித் தரும் முருங்கைக்காடு! appeared first on Dinakaran.

Read Entire Article