வறண்ட சருமம் தரும் பிரச்னையால் அவ்வப்போது உடலும் மனதும் வாடி விடுகிறதா? சருமம் ஈரப்பதத்தை எளதில் இழக்கிறதா? இதனால் நீங்கள் அடிக்கடி அரிப்பு, தோல் வெடிப்பு, எரிச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறீர்களா? இதற்கு சரும வறட்சிதான் பல தொந்தரவுகளுக்கு காரணமாக இருக்கிறது. மேலும் அடுத்து வரும் காலங்கள் மழை மற்றும் குளிர் காலங்கள் என்கையில் சருமம் மிக எளிதாக வறட்சியை சந்திக்கும். இதற்கு சில வீட்டிலேயே செய்துகொள்ளும் படியான தீர்வுகள்.
பன்னீர் திரவம்
ரோஸ் வாட்டர் எனப்படும் பன்னீர் திரவம் ஈரப்பதமாக்க பெரிதும் உதவுகிறது. ஏனெனில் இது பி.எச்.அளவை சமன் செய்கிறது. வறண்ட சருமத்துக்கு இது சிறந்த தேர்வாகும். உங்கள் சருமம் வறண்டு அரிப்புடன் இருந்தால், ரோஸ் வாட்டர் தடவிவந்தால் அரிப்பு எற்படாது. சருமமும் ஈரமாக இருக்கும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே சருமத்தை ஈரமாக்கும் பண்பைக் கொண்டது. வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது நல்லது. நீங்கள் குளிப்பதற்கு முன் அல்லது பின் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெய்க் கால்களில் தடவி மசாஜ் செய்யலாம். தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தி வாரம் ஒருமுறை மசாஜ் செய்துகொண்டு குளிக்கலாம்.
தேன்
தேன் ஒர் இயற்கை ஈரப்பதமூட்டி. இது சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்குகிறது. இது தவிர அலர்ஜி எதிர்ப்பு பண்புகளையும் தேன்கொண்டுள்ளது. இது எரிச்சல், தோல் சிவத்தல் மற்றும் வேறு ஏதேனும் தோல் அலர்ஜிகளையும் கூட சரி செய்ய உதவுகிறது. மேலும் இது சருமத்தை பிரகாசமாக்கும் ப்ளீச்சிங் திறன் கொண்டது.
வெண்ணெய்ப் பழம்
அவகோடா எனப்படும் வெண்ணெய்ப் பழத்தில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அத்தியாவசிய வைட்டமின்களும் உள்ளன. இந்த பழம் சருமத்துக்கு ஊட்டம் அளிக்கிறது. இயற்கையான மாய்ச்ரைசராக செயல்படும். இது வறண்ட சருமத்துக்கு நல்ல பலன் தரும். வயதான அறிகுறிகளை குறைக்கவும் உதவுகிறது. இந்த பழத்தை மசித்து உங்கள் முகத்திலும், உடலிலும் நேரடியாக பயன்படுத்தலாம்.
பப்பாளி
பப்பாளி பழத்திற்கும் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் திறன் உண்டு. மேலும் சருமத்தை பிரகாசமாக்குகிறது. இது சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்க பெரிதும் உதவுகின்றன. பப்பாளியை முகத்துக்கு பேஸ்பேக் ஆக பயன்படுத்தலாம்இவற்றுடன் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்த சத்தான உணவுகளையும், பழங்களையும் உட்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் பருகவேண்டும். அதிக நேரம் ஏ.சி.யில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
– அ.ப.ஜெயபால்
The post வறண்ட சருமமா? கவலை வேண்டாம்! appeared first on Dinakaran.