வர்த்தகத்தை நிறுத்தப்போவதாக மிரட்டி இந்தியா-பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு பேட்டி

5 hours ago 3

வாஷிங்டன்: வர்த்தகத்தை நிறுத்தப்போவதாக மிரட்டி இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்கியதால் இருநாடுகள் இடையே போர் மூண்டது. 4 நாட்கள் நடந்த சண்டை கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இதை முதலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் அறிவித்தார்.

கடந்த சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை வெளியிட்டார். அதில் இரவு முழுவதும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அடிப்படையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததாக அவர் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்திருந்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் உச்சத்தில் இருந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும், துணை அதிபர் ஜே.டி. வான்சும் , இந்தியப் பிரதமர் மோடி, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ‘போர் நிறுத்தம்’ குறித்து முதலில் அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்க அதிபர் டிரம்ப் என்பதும், இது இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வெளியாவதற்கு முன்பு வெளியிடப்பட்டது என்பதும் சர்வதேச அளவில் பலருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தியது. டிரம்பின் பதிவுக்குப் பிறகு, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் சமூக ஊடக தளமான எக்ஸில் ‘சண்டை நிறுத்தத்தை’ உறுதிப்படுத்தினார். சண்டை நிறுத்தம் குறித்து தனது முதல் பதிவில் குறிப்பிட்டிருந்த டிரம்ப், இரண்டாவது பதிவில் காஷ்மீர் பிரச்னைக்கான தீர்வு குறித்து பேசியிருந்தார்.

ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மூன்றாவது நாட்டின் மத்தியஸ்தத்தையும் ஏற்காது என்ற நிலையில் டிரம்ப் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடத் தயாராக இருப்பதாக தானாகவே முன்வந்து தெரிவித்து இருந்தார். ‘சண்டை நிறுத்தம்’ தொடர்பான அறிவிப்புக்குப் பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு வெளிப்படையாக நன்றி தெரிவித்தார். ஆனால் இந்தியா வெளியிட்ட எந்தவொரு பொது அறிக்கையிலும் அமெரிக்கா அல்லது அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்தியஸ்தம் பற்றி குறிப்பிடவில்லை. இந்த சூழலில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோசமான அணுசக்திப் போரை நான் தான் தடுத்து நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையின் ரூஸ்வெல்ட் அறையில் மருந்து விலைகள் குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது இதுபற்றி அவர் கூறியதாவது: கடந்த சில நாட்களாக நடந்த வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறேன். கடந்த சனிக்கிழமை, எனது நிர்வாகம் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்தத்தை ஏற்படுத்த உதவியது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒரு நிரந்தர போர்நிறுத்தம் என்று நான் நினைக்கிறேன். இது அணு ஆயுதம் கொண்ட இரண்டு நாடுகளுக்கும் இடையேயான ஆபத்தான மோதலை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. போரை நிறுத்தினால் இருநாடுகள் இடையே நடக்கும் அதிக வர்த்தகம் செய்ய உள்ளதாக நான் தெரிவித்ததே போர் நிறுத்தத்திற்கு ஒரு பெரிய காரணம்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமைத்துவம் அசைக்க முடியாததாகவும், சக்திவாய்ந்ததாகவும் இருந்தது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நிலைமையின் தீவிரத்தை முழுமையாக அறிந்து புரிந்துகொள்ள அவர்களுக்கு வலிமை, ஞானம் மற்றும் மன உறுதி இருந்தது. நாங்கள் நிறைய உதவி செய்தோம், மேலும் வர்த்தகத்திலும் நாங்கள் உதவினோம். நான் சொன்னேன், ‘வாருங்கள், நாங்கள் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம்’. நீங்கள் போரை நிறுத்தாவிட்டால் வர்த்தகத்தை நிறுத்துவோம். நீங்கள் போரை நிறுத்தினால், நாங்கள் வர்த்தகம் செய்கிறோம். நீங்கள் போரை நிறுத்தவில்லை என்றால், நாங்கள் எந்த வர்த்தகத்தையும் செய்யப் போவதில்லை.

நான் அதைப் பயன்படுத்திய விதத்தில் மக்கள் ஒருபோதும் வர்த்தகத்தை உண்மையில் பயன்படுத்தியதில்லை, நான் உங்களுக்குச் சொல்ல முடியும், திடீரென்று அவர்கள், நாங்கள் போரை நிறுத்தப் போகிறோம் என்று சொன்னார்கள். அவர்கள் அதைச் செய்தார்கள். பல காரணங்களுக்காகச் செய்தார்கள், ஆனால் வர்த்தகம் அதில் பெரிய ஒன்று. நாங்கள் பாகிஸ்தானுடன் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம். இந்தியாவுடனும் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம். இந்தியாவுடன் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

இருநாடுகளும் மோதினால் அது ஒரு மோசமான அணு ஆயுதப் போராக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம். அதனால் போரை நிறுத்தியதைப்பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். துணை அதிபர் வான்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோ ஆகியோரின் பணி மற்றும் முயற்சிகளுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் அதில் மிகவும் கடினமாக உழைத்தனர். இவ்வாறு கூறினார். டிரம்பின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

* நீங்கள் போரை நிறுத்தாவிட்டால் வர்த்தகத்தை நிறுத்துவோம் என்ற இந்தியா, பாகிஸ்தானிடம் சொன்னோம்.
* போரை நிறுத்தினால் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம் என்றோம்.
* இருநாடுகளும் போரை நிறுத்துவதாக அறிவித்தார்கள்.
* என்னைப் போல் யாரும் வர்த்தகத்தை பயன்படுத்தி யாரும் போரை நிறுத்தியதில்லை.
* போரை நிறுத்தியதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

The post வர்த்தகத்தை நிறுத்தப்போவதாக மிரட்டி இந்தியா-பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article