
புதுடெல்லி,
அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இம்மாத தொடக்கத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, இந்திய வர்த்தக துறையின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழு டெல்லி திரும்பியது.
இந்நிலையில், அமெரிக்காவுடன் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடத்த வசதியாக மத்திய வர்த்தக அமைச்சக குழு விரைவில் வாஷிங்டனுக்கு செல்கிறது. அந்த பயணத்தின்போது, அமெரிக்காவுடன் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மற்றும் முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து பேசப்படும். குழுவின் பயண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும், அடுத்த வாரம் செல்லும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தும் இந்திய குழுவின் தலைவரும், வர்த்தக துறையின் சிறப்பு செயலாளருமான ராஜேஷ் அகர்வால் டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது:-
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்தியா முயன்று வருகிறது. செப்டம்பர், அக்டோபர் மாதத்துக்குள் வர்த்தக ஒப்பந்தத்தின் முதல்கட்டத்தையும், அதற்கு முன்பே இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தையும் இறுதி செய்வதே இந்திய குழுவின் நோக்கம்.
இந்தியா இதுவரை 26 நாடுகளுடனான 14 தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை அமல்படுத்தி உள்ளது. சமீபத்தில், இங்கிலாந்துடன் ஒப்பந்தம் செய்தோம். ஐரோப்பிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை பேசி, இறுதி செய்ய முயன்று வருகிறோம்.
சிலி, பெரு உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடனும் ஒப்பந்தம் செய்துள்ளோம். நியூசிலாந்துடனும் பேசி வருகிறோம். ஆகவே, பெரிய வர்த்தக கூட்டாளி நாடுகளையும், பெரிய பொருளாதார நாடுகளையும் பெரிய அளவில் ஒருங்கிணைத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.