வருமானம் அள்ளிக் கொடுக்கும் திருமண வளையல்கள்!

2 months ago 9

திருமணம், சடங்கு, வளைகாப்பு, இப்படி எந்த வைபவம் ஆனாலும் அத்தனை உறவுகளின் சீர்களிலும் தவிர்க்க முடியாத ஒன்று வளையல்கள். பளபளக்கும் பட்டாடைகள், தங்கம் இல்லை என்றால் கூட பூ, பொட்டு, வளையல் இம்மூன்றும் நிச்சயம் இடம்பிடிக்கும். அப்படி வளையல்களுக்கு எப்போதுமே ஒரு மிகப்பெரிய இடம் நம் விழாக்களில் உண்டு. மேலும் இன, மதம் பாகுபாடின்றி சீர்களில் வைக்கப்படுபவை வளையல்கள் தான். எனவேதான் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த வளையல்களின் டிரெண்ட் அடுத்தடுத்தக் கட்டத்திற்கு நகர்கின்றன. இதோ தற்போது பிரத்தியேகமாக உருவாக்கப்படும் கஷ்டமைஸ்ட் வளையல்கள் மற்றும் திருமண வளையல்கள் என இன்னொரு வடிவம் பெற்று திருமண மற்றும் விழாக்களின் சந்தையில் மிக முக்கியமான இடம் பிடித்திருக்கின்றன. முன்பெல்லாம் தாய் மாமன் கொண்டுவரும் சீர்வரிசையில் வளையல்களுக்குதான் முதலிடம். மேலும் மணப்பெண் தாய் மாமன் கொண்டு வரும் வளையல்களை அத்தைமார்கள் இணைந்து அணிவிக்க அதுவே ஒரு தனி நிகழ்ச்சியாக நடக்கும். இப்போதும் அந்த நிகழ்வுகள் நடக்கின்றன. ஆனால் வளையல்கள் இன்னும் கிராண்டாக மாறியிருக்கின்றன. இன்னொரு புறம் முன்பு திருமணம் என்றால் வேலைக்கு செல்லும் பெண்கள் குறைந்தது 15 நாட்கள் முன்பே விடுமுறை எடுத்து விடுவார்கள். அதனால் கண்ணாடி வளையல்களுடன் தங்களை பார்த்துக் கொள்வதும் சுலபம். ஆனால் இப்போது திருமணத்திற்கு மொத்தமாகவே ஒரு வாரம் முதல் 10 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கின்றன. இந்நிலையில் கண்ணாடி வளையலுடன் பயணம், வாகனம் ஓட்டுவது, வேலை செய்வதெல்லாம் மிகவும் கடினம். இதையும் மனதில் கொண்டே தற்போது கஸ்டமைஸ்ட் வளையல்கள் அதிகம் வரத்துவங்கிவிட்டன. முக்கியமாக உடைக்கு மேட்சிங்காக கிராண்டாக வெண்டும் என்பதும் ஒரு காரணம். பொதுவாக இவைகள் அடிப்படை பிளாஸ்டிக் மற்றும் அதில் கைகளால் வண்ண நூல்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட வளையல்களாக வருகின்றன. பட்ஜெட்டிற்கு ஏற்ப குந்தன், கற்கள், பாசிகள், ஜரிகைகள் உள்ளிட்ட அத்தனை வேலைப்பாடுகளுடனும் உருவாக்கப்படுகின்றன. பிரைடல் வளையல்கள் உருவாக்கத்தில் கடந்த ஐந்து வருடங்களாக நல்ல வருமானம் ஈட்டி வருகிறார் சல்மா. வளையல்கள் செய்யும் நுணுக்கங்கள் மற்றும் இதன் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட தகவல்களை விபரமாக பேசுகிறார்.

‘என் பேரு சல்மா எனக்கு பூர்வீகம் கமுதி, சிறுவயதில் ஆந்திராவில் தான் வளர்ந்தேன். திருமணத்திற்கு பிறகு சென்னையில் செட்டில் ஆகிட்டேன். என் கணவர் பஷீர், பிசினஸ் செய்திட்டு இருக்கார். எங்களுக்கு திருமணம் ஆகி 17 வருடங்கள் ஆச்சு. கல்யாணத்துக்கு முன்னாடி அம்மாவுடன் சேர்ந்து டெய்லரிங் வேலை செய்திட்டு இருந்தேன். தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு குடும்பம் குழந்தை காரணமா ஹவுஸ் வைஃப் ஆகிட்டேன். கடந்த அஞ்சு வருஷத்துக்கு முன்னாடிதான் புடவை ப்ரீ-ப்ளீட்டிங் செய்து அதில் ஒரு வருமானம் வந்துகிட்டு இருந்துச்சு. ப்ரீ-ப்ளீட்டிங் செய்து கொடுக்கும் பொழுது ஏன் இது கூடவே பிரைடல் வளையல்கள் செய்துக் கொடுக்கக் கூடாது அப்படின்னு தோணுச்சு. ஆரம்பத்தில் இலவசமாக தான் செய்ய ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்தில் சில ப்ரெண்ட்ஸ் மூலமா வெறும் வளையல்கள் மட்டும் செய்து கொடுங்க அப்படின்னு கேட்க ஆரம்பிச்சாங்க. மூலப் பொருட்களுக்கு மட்டும் பணம் வாங்கிக்கிட்டு வளையல்கள் தனியா செய்து கொடுக்க ஆரம்பிச்சேன். இதையே என் பிசினஸாக மாற்றக் கூடாது அப்படின்னு தோணுச்சு. அப்படி உருவானதுதான் ஆயிஷு பேங்கல்ஸ் & பிரேஸ்லெட்ஸ் என்னும் சல்மா பிரைடல் வளையல்கள் உடன் கஷ்டமைஸ்ட் நகைகளையும் செய்து விற்கத் துவங்கி இருக்கிறார்.

உடனடி பீட்ஸ் ஜுவல்ஸ் இவைகளையும் என்னுடைய பிசினஸில் சேர்த்துக்கிட்டேன். பொதுவாக இப்போ ஒபிசிட்டி என்கிற பிரச்னை அதிகரிச்சிட்டே வருது. இதனால் உடல் பருமனான பெண்கள் அதிகமா இருக்கோம். நாம பணமே அதிகம் கொடுக்க தயார்ன்னா கூட கடைகளில் 2.10 தான் இருக்கறதிலேயே பெரிய சைஸ். அதிலும் 2.8, 2.10 அளவுகள்ல டிசைன்ஸ் அவ்வளவா கிடைக்காது. இதையெல்லாம் மனசிலே வெச்சுதான் இந்த வளையல் மேக்கிங்கில் என்னால் எவ்வளவு சிறப்புக் கொடுக்க முடியுமோ கொடுத்தேன். இன்னொரு தோழி மூலமா சேலத்திலே ஒரு கண்காட்சி. அங்கே ஸ்டால் போடலாம்ன்னு ஐடியா கொடுத்தாங்க. வெறும் வளையல்களா வேண்டாம். கூடவே நகைகள் செய்து கொடுங்கன்னு கேட்டபோதுதான் பீட்ஸ் நகைகள் செய்து கொடுத்து அங்கே ஸ்டால் போட்டாங்க. எதிர்பார்க்கவே இல்ல, நல்ல வருமானம் கிடைச்சது. தொடர்ந்து எங்கே ஸ்டால் போட வாய்ப்புக் கிடைச்சாலும் விடாம என்னுடைய புராடெக்ட்களைக் கொண்டு போயிடுவேன். இதற்கெல்லாம் என் கணவர்தான் முதல் ஆரம்பம். அவர் கொடுத்த ரூ.1000 தான் இன்னைக்கு இவ்வளவு பெரிய பிஸினசா மாறியிருக்கு. அதே போல் அவர் கிட்ட பணமே வாங்கினாலும் லாபம் போக மீதித் தொகையை அவர் கிட்ட கொடுத்திடுவேன். இப்படி செய்யும் போதுதான் நாம மூலப்பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்கிறோம், எவ்வளவு லாபம் நிற்குது. இப்படி திட்டமிட முடியும். ஒரு லாபத்தை அடுத்த மூலதனமா போட்டுதான் இந்த பிரைடல் வளையல்கள் செய்யத் துவங்கினேன். வளையல்களிலேயே மணமகன் – மணமகள் பெயர், ஒரு பர்த்டேவுக்கு குழந்தை பெயர், இப்படி நிறைய டிசைன்கள் செய்துக் கொடுக்க கஸ்டமர்களுக்கும் ஒருத்தர் மூலமா இன்னொருத்தர்ன்னு அதிகரிக்க ஆரம்பிச்சாங்க‘ என்னும் சல்மா உடனடி பீட்ஸ் நகைகளில் நல்ல வருமானம் வருகிறது என்கிறார்.

‘ஆரம்பத்தில் பிரேஸ்லெட், தோடு, ஹாரம் இதெல்லாம் செய்துதான் கொடுத்தேன். ஒரு சிலர் ஃப்ரெண்ட்ஸ் பெயர், உடைக்கு மேட்சிங்கா பீட்ஸ் நகைகள்ன்னு கேட்டாங்க. அதனால் எங்கே ஸ்டால் போட்டாலும் அங்கேயே பீட்ஸ் நகைகள் உடனடியாக செய்துக் கொடுக்கவும் தயாரா இருப்பேன். பிரைடல் வளையல்கள், விழாக்களுக்கான வளையல்கள் மட்டும் இல்லாம இப்போ பொதுவாகவே ஒரு கிராண்டான டிரெஸ், புடவை இப்படி வாங்கினாலே வளையல் கேட்கறாங்க. ரெண்டே ரெண்டு வளையல் கூட செய்து வாங்கிக்கற பெண்களும் இருக்காங்க. உடைகளில் எம்பிராய்டரி போடுகிற நூல்களைதான் பயன்படுத்தறேன். அதனால் அவ்வளவு சுலபமா சேதாரம் ஆகாது. அதிகம் தண்ணீர் படாமல் பார்த்துக்கணும். காரணம் என்னதான் எம்பிராய்டரி நூலானாலும் நாம உறுதியா சாயம் போகாதுன்னு சொல்ல முடியாது. அதனால் அதில் மட்டும் கவனம் தேவை. போலவே வளையல்கள் செய்ய கால அவகாசம் எடுக்கும். அவசரத்திலே எதையோ ஒட்டி எல்லாம் கையிலே கொடுக்க முடியாது. நான் ஒட்டுகிற கம்முக்கே 48 மணி நேரம் டைம் கொடுக்கணும். இதை சொல்லிதான் ஆர்டர் வாங்குவேன். இது அத்தனைக்கும் என் குடும்பத்தின் முழு சப்போர்ட் இருக்கு. நான் வளையல் செய்ய உட்கார்ந்தா கூட என் குடும்பம் மற்ற வீட்டுப் பொறுப்புகளை கையில் எடுத்துப்பாங்க’ என்னும் சல்மான் ரூ.300 துவங்கி ரூ. 2500 வரையிலும் கூட வளையல்கள் விற்பனை செய்கிறார். மேலும் ஆன்லைனிலும் தற்போது சல்மாவுக்கு ஆர்டர்கள் நிறைய வருகின்றன.
– ஷாலினி நியூட்டன்.

 

The post வருமானம் அள்ளிக் கொடுக்கும் திருமண வளையல்கள்! appeared first on Dinakaran.

Read Entire Article