
அகமதாபாத்,
ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்ற 67-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்சுடன் மோதியது. இதில் சென்னை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது.
இருப்பினும் நடப்பு சீசனில் வழக்கத்திற்கு மாறாக தடுமாற்றமாக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் 14 போட்டிகளில் விளையாடி வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து பரிதாபமாக வெளியேறியது.
இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வருங்கால அணியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை தற்போதே தொடங்கியுள்ளது. இதன் முதல் நடவடிக்கையாக அடுத்த சீசனில் சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னாவை நியமிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை சென்னை - குஜராத் போட்டியின்போது வர்ணனையில் ஈடுபட்டிருந்த சுரேஷ் ரெய்னா மற்றும் ஆகாஷ் சோப்ரா ஏறக்குறைய உறுதிப்படுத்தினர்.
வர்ணனையின்போது, அடுத்த ஐ.பி.எல். சீசனுக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளரை நியமிக்க சென்னை அணி தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரெய்னா தெரிவித்தார்.
உடனே ரெய்னாவிடம் இருந்து கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காக, 'புதிய பேட்டிங் பயிற்சியாளரின் முதலெழுத்துக்கள் 'எஸ்' (S)-ல் தொடங்குமா' என்று ஆகாஷ் சோப்ரா கேட்டார்.
அதற்கு ரெய்னா, 'அவர் வேகமான அரைசதம் அடித்துள்ளார்' என்று கூறி சிரித்தார்.
ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்களின் சாதனை பட்டியலில் சுரேஷ் ரெய்னா 2-வது இடத்தில் உள்ளார். இதன் மூலம் அவர் சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.