புதுடெல்லி: இந்திய வரலாற்றில் முதல் முறையாக உச்ச நீதிமன்ற ஊழியர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நேரடி நியமனங்கள் மற்றும் பதவி உயர்வில் எஸ்சி பிரிவினருக்கு 15 சதவீதமும், எஸ்டி பிரிவினருக்கு 7.5 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும். நாடு முழுவதும் அனைத்து அரசு நிறுவனங்களிலும், பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் ஊழியர்கள் பணி நியமனங்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் மட்டும் இடஒதுக்கீடு என்பது அறவே இல்லாத நிலை இருந்தது.
இந்நிலையில், சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக உச்ச நீதிமன்றத்திலும் ஊழியர்கள் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு முறையை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அறிமுகப்படுத்தி உள்ளார். இதன்படி, நேரடி பணி நியமனங்களில் எஸ்சி பிரிவினருக்கு 15 சதவீத இடஒதுக்கீடும், பதவி உயர்வில் எஸ்டி பிரிவினருக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்படும். இந்த இடஒதுக்கீடு கொள்கை, பதிவாளர்கள், மூத்த தனி உதவியாளர்கள், உதவி நூலகர்கள், இளநிலை நீதிமன்ற உதவியாளர்கள், அறை உதவியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு பொருந்தும். நீதிபதிகளுக்கு இந்த இடஒதுக்கீடு பொருந்தாது.
இதுதொடர்பாக கடந்த மாதம் 24ம் தேதி அனைத்து உச்ச நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க இடஒதுக்கீடு கொள்கை 2025 ஜூன் 23ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீடு கொள்கைக்கு முக்கிய காரணமாக இருப்பவர் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய். இவர், நாட்டின் 2வது தலித் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இடஒதுக்கீடு கொள்கை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறுகையில், ‘‘அனைத்து அரசு நிறுவனங்களும், பல உயர் நீதிமன்றங்களும் ஏற்கனவே எஸ்சி, எஸ்டிகளுக்கான இடஒதுக்கீடுகளை வழங்கி வருகின்றன. எனவே, உச்ச நீதிமன்றமும் ஏன் விதிவிலக்காக இருக்க வேண்டும் என்பதற்காக இடஒதுக்கீடு கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கி உள்ளது. நமது நடவடிக்கைகள் நமது கொள்கைகளை பிரதிபலிக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலும் இந்த இடஒதுக்கீடு கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. சமத்துவமும் பிரதிநிதித்துவமும் போட்டியிடும் லட்சியங்கள் அல்ல. மாறாக இந்தியாவின் அரசியலமைப்பு பார்வையை முன்னோக்கி செலுத்த இணைந்து செயல்பட வேண்டிய சக்திகள் என்பதை எப்போதும் அறிவேன்’’ என்றார்.
The post வரலாற்றில் முதல்முறையாக உச்ச நீதிமன்ற பணி நியமனத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு: பதவி உயர்விலும் சலுகை appeared first on Dinakaran.