வயநாடு,
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து, வயநாட்டின் எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானது. இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம், வயநாடு தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி (இன்று) இடைத்தேர்தல் அறிவித்தது
இதன்படி வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது . இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகெரி, பா.ஜனதா சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர். இன்று காலை தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வயநாட்டின் எதிர்காலத்திற்காக கைகோர்ப்போம் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
வயநாட்டில் உள்ள என் அன்பான சகோதர சகோதரிகளே, உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் இதயப்பூர்வமான நன்றி. இன்று ஜனநாயகத்தின் தீர்ப்பு நாள். நீங்கள் அனைவரும் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களியுங்கள் .வாக்கு மூலம் நீங்கள் எடுக்கும் நிலைப்பாடுதான் நமது ஜனநாயகத்தின் பலம். வயநாட்டின் எதிர்காலத்திற்காக கைகோர்ப்போம். என தெரிவித்துள்ளார்.