வயநாடு,
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த 2 தொகுதிகளிலும் ராகுல்காந்தி அபார வெற்றி பெற்றார். அதேவேளை, ராகுல் காந்தி ஏதேனும் ஒரு தொகுதியில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதையடுத்து, வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்தது.
இதன் மூலம் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வயநாடு தொகுதிக்கு வரும் நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பிரியங்கா காந்தி தனது தாய் சோனியா காந்தியுடன் நேற்று இரவு வயநாட்டுக்கு வந்தார். மேலும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் வயநாட்டுக்கு வந்தனர்.
இந்த நிலையில் பிரியங்கா காந்தி தற்போது வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இருந்தனர். முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பிரியங்கா காந்தி தனது சகோதரர் ராகுல் காந்தியுடன் ரோடு ஷோ (வாகன அணிவகுப்பு) நடத்தினார். வயநாடு இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மொகேரி போட்டியிடுகின்றனர்.