சென்னை: தமிழகத்தில் வசிக்கும் வன்னியர் இன மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கமும் போராட்டங்களை நடத்தி வருகிறது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்காததை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்திருந்தார்.
அதன்படி காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று நடந்தது. வன்னியர் சங்க மாவட்ட தலைவர் கன்னிவேல், பாமக மாவட்ட செயலாளர் மகேஷ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு அளித்தால் திமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்போம், எங்களுக்கு தேர்தல் நேரத்தில் சீட்டு வேண்டாம். அப்படி கொடுக்கவில்லை என்றால் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வோம்.
வரும் தேர்தலில் மானமுள்ள ஒரு வன்னியன் கூட வாக்களிக்க மாட்டான். மேலும், 116 சமுதாயங்களுக்கு 20 இட ஒதுக்கீடு வழங்கும்போது ஒரு சமூகத்திற்கு மட்டுமே 10.5 சதவீதம் வழங்குகிறீர்கள் என உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டது. இதற்கு சரியான பதிலை அரசு அளிக்கவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கச்சொன்னால் எங்களுக்கு அதிகாரம் கிடையாது என்கிறார்கள். 2018 சட்டத்தின்படி யார் வேண்டுமானாலும் கணக்கெடுப்பு நடத்தலாம். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால், தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.
The post வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்கினால் திமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.