வன்னியர் சங்க மாநாட்டிற்கு சென்ற வேன் விபத்து: 6 பேர் காயம்

19 hours ago 4

விழுப்புரம்,

வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில், சித்தரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு இன்று மாலை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதற்காக திருவிடந்தையில், 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது. சுமார் 2.5 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியைப் பார்க்க வசதியாக 100க்கும் மேற்பட்ட 60 அடி உயர ராட்சத எல்இடி திரை வைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில், வன்னியர் சங்கம் உருவானது முதல் இப்போது வரையிலான வரலாற்று தொகுப்பு அடங்கிய புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

மருத்துவக் குழுக்கள் மற்றும் 15 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.மாநாட்டிற்கு வருபவர்கள் வாகனம் பழுதானால் சரி செய்ய ஐந்து இடங்களில் தற்காலிக வாகன சரிபார்ப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மாலை 6 மணி அளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாநாட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் மேடைக்கு வந்தவுடன் பெஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, மாநாட்டு திடலில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள வன்னியர் சங்க கொடியை ராமதாஸ் ஏற்றி வைக்கவுள்ளார்.

இந்தநிலையில், சீர்காழி அடுத்த மருவத்தூரிலிருந்து மாமல்லபுரம் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் சித்திரை முழு நிலவு மாநாட்டிக்கு புறப்பட்டு சென்ற வேன் சீர்காழி அட்டகுளம் அருகே புறவழிச் சாலை இணைப்பு சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வேனில் பயணம் செய்த மருவத்தூர் பகுதியை சேர்ந்த விஜய், முத்துராமன், தேவா, சுந்தர் உள்ளிட்ட 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அருகிலிருந்தவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்டாலின் நேரில் விசாரணை செய்தார்.

அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை மீது ஏறி செல்லாமல் இருக்க வேகமாக வந்த வேன், ஓட்டுநர் வேகத்தடை இல்லாத அருகில் உள்ள எதிர்திசை சாலையில் வேனை வேகமாக திருப்பியபோது ஓட்டுநரின் அஜாக்கிரதையால் விபத்து ஏற்பட்டதாக வேனில் பயணம் செய்தவர்கள் கூறினர்.

Read Entire Article