வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத டி.எஸ்பியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு

8 hours ago 1


சென்னை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத கோட்டக்குப்பம் துணை காவல் கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்ய காவல்துறை இயக்குநருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் உள்ள 5.16 ஹெக்டேர் நிலம் தொடர்பாக ஆதி திராவிடர் சமுதாயத்தை சேர்ந்த செந்தாமரை மற்றும் மாற்று சமுதாயத்தை சேர்ந்த வீராசாமி இடையே பிரச்னை இருந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் நிலம் செந்தாமரைக்கு சொந்தமானது என தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றமும் இந்த தீர்ப்ைப உறுதி செய்தது. இந்நிலையில், வேறு சமூத்தை சேர்ந்த கேசவன் என்பவர் நிலத்துக்கு உரிமைகோரி திண்டிவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும், செந்தாமரை மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு வானூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், 2024ம் ஆண்டு நிலத்தை பார்வையிட சென்ற செந்தாமரையின் உறவினரை சாதியை சொல்லி திட்டி கடுமையாக தாக்கி செல்போனை கேசவன் பறித்துள்ளார். இதையடுத்து, சாதியை சொல்லி திட்டியதாக அளிக்கப்பட்ட புகார் மீது வழக்கு பதிவு செய்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், கேசவன் தரப்பில் அளிக்கப்பட்ட புகார் மீது 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், தங்களை சாதியை சொல்லி திட்டி, மிரட்டல் விடுத்ததாக கேசவன் மீது அளிக்கப்பட்ட புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கோட்டக்குப்பம் சரக துணை காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என செந்தாமரை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தே.அசோக் குமார், காவல் துணை கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தவில்லை. ஒருதலை பட்சமாக செயல்படுகிறார் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உரிய நடவடிக்கை எடுக்காத மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிமுறைகளை பின்பற்றாத காவல் துணை கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு டிஜிபிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

The post வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத டி.எஸ்பியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article