*கர்ப்பிணி யானை உயிரிழந்த விவகாரத்தை அடுத்து நடவடிக்கை
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானை, மான், காட்டுமாடு, காட்டுப்பன்றி, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள விளைநிலங்களில் முகாமிட்டு பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது.இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து வருகின்றன. இதனை தடுக்க வனத்துறையினரும் தீவிரமாக ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடைய சில தினங்களுக்கு முன்னர் கோவை மருதமலை பகுதியில் கர்ப்பிணி பெண் யானை உயிரிழந்த விவகாரத்தில் யானையை பிரேத பரிசோதனை செய்தபோது அதில் பிளாஸ்டிக் பைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் வனத்துறையினர் வன எல்லையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக சிறுமுகை வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களான லிங்காபுரம், காந்தவயல், சிறுமுகை, பெத்திக்ட்டை, இலுப்பநத்தம், வச்சினம்பாளையம், பாலப்பட்டி, இரும்பறை, சின்னக்கள்ளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிராமங்கள் தோறும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும், பிளாஸ்டிக் பொருட்களை வன எல்லைப்பகுதிகளில் கொட்டுவதை தவிர்க்க விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் கூறியதாவது, தற்போது கோடை காலம் என்பதால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி வன எல்லையில் உள்ள கிராமங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றன. அவ்வாறு தஞ்சம் புகும் வனவிலங்குகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், 24 மணி நேரமும் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ரோந்து குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் 24 மணி நேரமும் வன எல்லையோர கிராமங்களில் ரோந்து சென்று வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாத வண்ணம் தடுத்து வருகின்றனர்.
சமீபகாலமாக வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் அந்த கிராமங்களில் சேகரமாகும் குப்பைகளை வன எல்லைகளில் உள்ள இடங்களில் கொட்டி வருகின்றனர்.இதனால் வனவிலங்குகள் இந்த குப்பை கொட்டப்படும் இடங்களுக்கு சென்று அதனை உண்ணும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து ஏற்கனவே வன எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்களை தேடிச்சென்று வனத்துறையினர் மூலமாக குப்பைகளை வன எல்லைகளில் கொட்ட கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.மேலும்,வன எல்லையோர கிராமங்கள் தோறும் இதுகுறித்த விழிப்புணர்வு பதாகைகளையும் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து குப்பைகளை வன எல்லையோரம் கொட்டுவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.
The post வன எல்லையோரங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்க கிராமங்கள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வனத்துறையினர் முடிவு appeared first on Dinakaran.