வத்தலக்குண்டுவில் மஞ்சளாற்றில் மண்டி கிடக்கும் புதர்களை அகற்ற வேண்டும்

2 hours ago 2

*ஆற்றோர குடியிருப்பு வாசிகள் கோரிக்கை

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு மஞ்சளாற்றில் வளர்ந்துள்ள சீமை கருவேல மர முட்செடிகள் மற்றும் செடி, கொடிகளை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆற்றோர குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மஞ்சளாறு அணையிலிருந்து வத்தலக்குண்டு மஞ்சளாற்றுக்கு தண்ணீர் வருகிறது. புதுப்பட்டியில் இருந்து பெரியகுளம் சாலை, பிலிஸ்புரம், பெருமாள் கோயில், சங்கிலி கோயில், நடுத்தெரு, தெற்கு தெரு ஆகியவற்றையொட்டி ஊர் நடுவே செல்லும் மஞ்சளாற்றில் சீமை கருவேல மர முட்செடிகளும் மற்றும் செடி, கொடி புதர்களும் அனைத்து இடங்களிலும் நிறைந்து காணப்படுகிறது.

இதில் சீமை கருவேல மர முட்செடிகள் கோடை காலங்களில் மஞ்சளாற்றில் இருக்கும் குறைந்தளவு தண்ணீரையும் காலி பண்ணி விடுகிறது. மேலும் புதர்கள் மண்டி இருப்பதால் பாம்பு, தேள், நட்டுவாக்காலி போன்ற விஷ ஜந்துக்கள் மஞ்சளாற்றையொட்டி உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது.

எனவே பொதுப்பணி துறையினர் மஞ்சளாற்றிலுள்ள சீமை கருவேல மர முட்புதர்கள் மற்றும் செடி- கொடி புதர்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்களும், ஆற்றோர குடியிருப்புவாசிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சின்னா கூறியதாவது: மழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் வந்து விடுமோ என்ற அச்சத்தாலும், ஆற்றில் புதர் மண்டியிருப்பதால் விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் வந்து விடுமோ என்ற அச்சத்தாலும் தினசரி நிம்மதியாக தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே பொதுப்பணி துறை அதிகாரிகள் புதர்களை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post வத்தலக்குண்டுவில் மஞ்சளாற்றில் மண்டி கிடக்கும் புதர்களை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article