நெல்லை,ஜூன் 23: நெல்லை வண்ணார்பேட்டை தபால் நிலையத்திற்கு சொந்த இடம் இருந்தும், அதில் கட்டிடம் கட்டாமல் வாடகை கட்டிடத்தில் இயங்குவதால் அப்பகுதி மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். விரைவில் அங்கு புதிய கட்டிடம் கட்டி பொதுமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளின் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை வண்ணாரபேட்டை தபால் அலுவலகமானது, அங்குள்ள சாலை தெரு மெயின் ரோட்டில் சொந்த கட்டடத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. ஆனால் தபால் நிலைய கட்டிடம் உறுதியாக இல்லை என கூறி அங்கு இருந்த பழைய கட்டிடம் 2 ஆண்டுகளுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து வண்ணார்பேட்டை தபால் நிலையம் சாலை தெருவின் முடிவில் உள்ள குறுகலான மாடி கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வந்தது. இதனால் அங்கு வரும் முதியோர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் தபால் நிலையத்திற்கு மக்கள் வந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.
இதையடுத்து தபால் துறை அதிகாரிகள் தபால் அலுவலகத்தை அதே பகுதியில் உள்ள தரைதள வீட்டிற்கு மாற்றினர். ஆனால் தற்போது தபால் நிலையம் செயல்படும் இடத்திற்கு சென்றுவர போதுமான இட வசதி இல்லை. அந்த வீட்டிற்கு செல்லும் வழியில் காம்பவுண்ட் வீடுகள் உள்ளன. இந்த காம்பவுண்ட் வீட்டின் முன் பகுதியில் உள்ள ஒற்றையடி பாதையில் தான் செல்ல வேண்டும். அதுவும் வீட்டில் வாடகைக்கு குடியிருப்போர் மட்டுமே பயன்படுத்தக்கூடிய அந்த இடத்தில் வயதான முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர முடியாத நிலையில் உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘வண்ணார்பேட்டை தபால் நிலையத்திற்கு சொந்த இடம் உள்ளது. அதில் புதிய கட்டிடம் கட்டி தராமல் அடிக்கடி தபால் நிலையத்தை மாற்றி கொண்டே செல்கின்றனர். அதிலும் இப்போதுள்ள குறுகலான பாதையில் தபால் நிலையத்திற்கு பொதுமக்கள் சென்று வர வசதிகளே இல்லை. அப்பகுதியில் நாய்கள் தொல்லையும் அதிகம் காணப்படுகிறது. தபால் நிலைய சேமிப்பு மற்றும் வைப்பு நிதி மூலம் தங்களது சேமிப்பு பணம் பாதுகாப்பாக இருக்கும் என பலரும் எண்ணுகின்றனர். அதிலும் தபால் நிலைய சேவையை பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே தபால் துறை அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர் இந்த பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு பராமரிப்பின்றி புதர் மண்டி கிடக்கும் இடத்தில் உடனடியாக புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
The post வண்ணார்பேட்டையில் சொந்த இடம் இருந்தும் வாடகை கட்டிடத்தில் இயங்கும் தபால் நிலையம் appeared first on Dinakaran.