வடிவேலு வெற்றிக்கு பின்னால் நான்தான் இருந்தேன்: நடிகர் சிங்கமுத்து

3 months ago 21

 சென்னை,

யூ டியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில், தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்கும்படி, நடிகர் சிங்கமுத்துக்கு உத்தரவிடவும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டீக்காராமன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, நடிகர் சிங்கமுத்து தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில், வடிவேலுவுக்கு எதிராக அவதூறாக தெரிவித்த வார்த்தை எது என்பதை அவர் தனது மனுவில் குறிப்பிடவில்லை எனவும், அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் தனது சொந்த அனுபவத்தையும் திரைத்துறையை சேர்ந்தவர்களின் கருத்துக்களையும் மட்டுமே அந்த பேட்டியில் தெரிவித்ததாக சிங்கமுத்து குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக வடிவேலு தரப்பில் தனக்கு அனுப்பப்பட்ட வழக்கறிஞர் நோட்டீசுக்கு அளித்த பதிலில், வருத்தம் தெரிவித்த போதும் கூட, தன்னை துன்புறுத்தும் நோக்கில் நடிகர் வடிவேலு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார் என்று பதில்மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளதை சுட்டி காட்டிய அவர், பிற நகைச்சுவை நடிகர்களுக்கு நகைச்சுவை காட்சிகள் எழுதிக் கொடுப்பதற்கு வடிவேலு அனுமதிப்பதில்லை எனவும் அதையும் மீறி எழுதி கொடுத்ததால் தன்னை பழிவாங்கும் நோக்கில், தயாரிப்பாளர்களிடம் தவறாக கூறி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் வடிவேலுவின் வெற்றியின் பின்னால் இருந்துள்ளதாகவும், அதன் காரணமாக அவர் பணம் புகழ் சம்பாதித்தார் எனவும் பதில் மனுவில் சிங்கமுத்து குறிப்பிட்டுள்ளார். நடிகர் வடிவேலு சொத்து வாங்கியதில் எந்த நிதி இழப்பையும் எதிர்கொள்ளவில்லை என்றும், மாறாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை இன்று வரை தான் சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தனது பேட்டியை முழுமையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றும் தற்போது அந்த பேட்டி யூ டியூப்-பில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்

அவரைப் பற்றி பேச தடை கேட்பதற்கு எந்த உரிமையும் இல்லை என்பதால், நடிகர் வடிவேலுவின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பதில் மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி டிக்காராமன், அக்டோபர் 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Read Entire Article