வடசென்னையில் பொதுமக்களை கத்தியால் வெட்டி வழிப்பறி செய்த 2 பேர் கைது: தப்பிக்க முயன்றபோது விழுந்து கை, காலில் எலும்பு முறிவு

4 weeks ago 3

பெரம்பூர்: வியாசர்பாடி பள்ள தெருவை சேர்ந்த தேவராஜ் (34), நேற்று முன்தினம் அதிகாலை, வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த இருவர், தேவராஜை கத்தியால் வெட்டிவிட்டு, அவரது செல்போன் மற்றும் கழுத்தில் கிடந்த 4 சவரன் செயினை பறித்து சென்றனர். இதேபோல், செம்பியம் தீட்டி தோட்டம் 6வது குறுக்கு தெருவை சேர்ந்த ஜாபர் அகமது (57), நேற்று முன்தினம் அதிகாலை 3.50 மணிக்கு, புளியந்தோப்பு கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், ஜாபர் அகமதுவை கத்தியால் வெட்டிவிட்டு, ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடபுரம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (40), மணலியில் உள்ள தனது தங்கை புஷ்ப லதாவை பார்ப்பதற்காக ரயில் மூலம் பெரம்பூர் ரயில் நிலையம் வந்து, நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணிக்கு மாதவரம் நெடுஞ்சாலை வழியாக மூலக்கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த இருவர், சக்திவேலை சரமாரியாக தாக்கி, அவரிடம் இருந்த பட்டாசு மற்றும் புத்தாடைகளை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுதொடர்பான புகாரின் பேரில், புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் நேற்று காலை வியாசர்பாடி கூட்ஸ் ஷெட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை மடக்கினர். அவர்கள், பைக்கை நிறுத்தாமல் சென்றனர். போலீசார் அவர்களை விரட்டியபோது, சாலை தடுப்பில் பைக் மோதி அவர்கள் கீழே விழுந்தனர். இதில், பலத்த காயமடைந்த அவர்களை, வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட போலீசார் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் அவர்கள் வியாசர்பாடி தேபர் நகர் 1வது தெருவை சேர்ந்த சத்யராஜ் (32), வியாசர்பாடி புது நகரை சேர்ந்த பாலாஜி (24) என்பதும், இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் அதிகாலை வியாசர்பாடி, புளியந்தோப்பு, செம்பியம் ஆகிய பகுதிகளில் கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிய வந்ததும், இவர்கள் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில், பாலாஜிக்கு வலது கால் உடைந்தது. சத்யராஜுக்கு வலது கை உடைந்தது. இருவருக்கும் மாவு கட்டு போட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வடசென்னையில் பொதுமக்களை கத்தியால் வெட்டி வழிப்பறி செய்த 2 பேர் கைது: தப்பிக்க முயன்றபோது விழுந்து கை, காலில் எலும்பு முறிவு appeared first on Dinakaran.

Read Entire Article