வடக்கு தாலுகா அலுவலகத்திற்கு ரூ.4.50 கோடியில் புதிய கட்டிடம்: பொதுப்பணித்துறை தரப்பில் பணிகள் விறுவிறு

2 weeks ago 3

மதுரை, நவ. 6: வடக்கு தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளில், பொதுப்பணித்துறை விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளது. மதுரை வடக்கு தாலுகா அலுவலகத்தின் கீழ் சாத்தமங்கலம், கூளப்பாண்டி, சத்திரபட்டி, சமயநல்லூர், குலமங்கலம் ஆகிய பிர்க்காக்களும், 40க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களும் உள்ளன. இதில் சாதி, வருமானம், இருப்பிடம், முதல் பட்டதாரி, பட்டா மாறுதல், கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது உட்பட பல்வேறு வகை சான்றிதழ்கள் கோரி இ-சேவை மையங்கள் வாயிலாகவும், ஆன்லைன் வாயிலாகவும் விண்ணப்பிக்கப்படுகிறது.

ஆன்லைன் விண்ணப்பங்கள் வி.ஏ.ஓ.,ஆர்.ஐ., தாசில்தார் வாயிலாக சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகின்றன. கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் இயங்கி வரும் இந்த தாலுகா அலுவலகத்திற்கு, சான்றிதழ்கள் உட்பட இதர வருவாய்த்துறை சார்ந்த சேவைகளுக்காக. தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு, வந்து செல்வோரின் வசதிக்கேற்ப போதியளவில் இடவசதி இல்லாததால், தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு மேற்கு மற்றும் கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அருகே தல்லாகுளம் காவல் நிலையத்தை ஒட்டிய 70 சென்ட் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், கட்டுமான பணிகளை துவக்கும் முன், அங்குள்ள பழைய காவலர் குடியிருப்பை அகற்ற வேண்டியது அவசியமாக இருந்தது. இதற்காக, பொதுப்பணித்துறை சார்பில் மாநகர காவல்துறையிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், 8 மாதங்களாகியும் குடியிருப்பை இடித்து அகற்ற தடையில்லா சான்றிதழ் வழங்கப்படவில்லை. இது குறித்து, தினகரன் நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, போலீஸ் தரப்பில் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, பழைய குடியிருப்பை அகற்றுவதற்காக அங்குள்ள, மின் இணைப்பை துண்டிக்க மின்வாரிய அதிகாரிகளிடம் பொதுப்பணித்துறை கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு, மின்வாரியம் தரப்பில் அனுமதி வழங்கியதையடுத்து, பொதுப்பணித்துறை ஓரிரு நாட்களில் குடியிருப்பை இடித்து அகற்றும் பணிகளை துவக்க உள்ளனர். அதேபோல், கட்டுமான பணிகளையும் ஆறு மாதங்களுக்குள் முடித்து, தாலுகா அலுவலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post வடக்கு தாலுகா அலுவலகத்திற்கு ரூ.4.50 கோடியில் புதிய கட்டிடம்: பொதுப்பணித்துறை தரப்பில் பணிகள் விறுவிறு appeared first on Dinakaran.

Read Entire Article