வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் கே.என்.நேரு

1 month ago 6

சென்னை: நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இன்று (14.10.2024) நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட அருணாசலேஸ்வரர் கோயில் தெரு (A.E. Koil St) மற்றும் இளையா தெரு ஆகிய பகுதிகளிலும், வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பெரம்பூர் சுரங்கப்பாதையிலிருந்து மழைநீரினை அருகிலுள்ள கால்வாயில் வெளியேற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகளையும், மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்கள் கண்காணிப்புடன் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

மேலும், ஸ்டீபன்சன் சாலை-ஓட்டேரி நல்லா கால்வாயில் தண்ணீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றப்பட்டுள்ளதைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ச்சியாக, ரிப்பன் கட்டட வளாகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் (ICCC) இருந்து, மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதைப் பார்வையிட்டு, அங்குள்ள 1913 அழைப்பு மையத்தில் பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் புகார்களுக்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் பெருமக்கள் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை துரிதப்படுத்திடவும், தேவையான பணிகளை செய்துதரவும் அறிவுறுத்தியுள்ளார்கள்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சார்பில், மழையானது 14.10.2024 மற்றும் 15.10.2024 ஆகிய நாட்களுக்கு மிதமாகவும், 16.10.2024 மற்றும் 17.10.2024 ஆகிய நாட்களில் ஒரு சில இடங்களில் அதிக கனமழையாக 40 செ.மீ. வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 15 செ.மீ. வரை பெய்யும் மழையின் போது மழைநீரானது உடனே வடிந்து விடும். அவ்வாறு இல்லாமல் குறுகிய நேரத்தில் 40 செ.மீ. மழைப் பொழிவு ஏற்படும் பொழுது, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

கடந்த ஆண்டு பெய்த கனமழையில் எந்தெந்த இடங்களில் தண்ணீர் தேங்கியது, அவற்றை அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முன்அனுபவத்தின் அடிப்படையில், அந்த இடங்களில் கூடுதல் மின்மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 169 நிவாரண மையங்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பால், ரொட்டி, பிஸ்கெட், குடிநீர் ஆகியவை தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் சமைத்து அந்தந்த இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் எந்தெந்த பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களோ அந்தந்தப் பகுதிகளில் உணவு தயார் செய்து உடனடியாக கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

பொதுசுகாதாரத்துறையின் சார்பில் தேவையான மருந்துப் பொருட்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மழைநீர் செல்லாமல் அடைப்பு ஏற்படும் இடங்களில், அந்த அடைப்பை சரிசெய்து மழைநீரை வெளியேற்றுவதற்குத் தேவையான இயந்திரங்கள் சென்னைக் குடிநீர் வாரியத்தின் சார்பில் வரவழைக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 990 இடங்களில் மோட்டார் பம்புகள், 57 டிராக்டர் பொருத்தப்பட்ட பம்புசெட்டுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மழையின் போது ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளின் அடிப்படையில் மோட்டார் பம்புகளுடன் ஜெனரேட்டர்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மழைநீர் தேங்கினால் பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளதைத் தொடர்ந்து, அனைத்து முன்னேற்பாடு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள இந்திய ஆட்சிப் பணி நிலையில் உள்ள 15 மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் அனைவரும் 24 மணி நேரமும் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 அழைப்பு மையத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 1450 அழைப்புகள் வரப்பெற்று, அனைத்து அழைப்புகளுக்கும் பதில் வழங்கப்பட்டு அந்தப் புகார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு மீண்டும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் மழை தொடர்பான புகார்களுக்கு மாநகராட்சியின் 150 இணைப்புகளுடன் கூடிய 1913 என்ற உதவி எண்ணிலும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள 044 25619204, 044 2561 9206 மற்றும் 044 2561 9207 என்ற தொலைபேசி எண்ணிலும் மற்றும் மாநகராட்சியின் சமூக வலைதளத்தின் வாயிலாகவும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில் தேங்கும் மழைநீரினை வெளியேற்றிட மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மழை பெய்யும் போது அனைத்துப் பணிகளையும் சிறப்பாக மேற்கொள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் அனைவரும் களத்தில் நின்று பணியாற்றி கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளின்போது, மேயர் ஆர்.பிரியா வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர் (பெரம்பூர்), தாயகம் கவி (வி.க.நகர்), ஐட்ரீம் இரா. மூர்த்தி (இராயபுரம்), எபினேசர்.ஜே.ஜே. (ஆர்.கே.நகர்), மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், மண்டல கண்காணிப்பு அலுவலர் ஆர்.கண்ணன், சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குநர் செ.சரவணன், வட்டார துணை ஆணையாளர்கள் கட்டா ரவி தேஜா, (வடக்கு), கே.ஜெ.பிரவீன் குமார், (மத்தியம்), மண்டலக் குழுத் தலைவர்கள் நேதாஜி யு. கணேசன், சரிதா மகேஷ்குமார், தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் கே.என்.நேரு appeared first on Dinakaran.

Read Entire Article