வடகிழக்கு பருவமழையையொட்டி கட்சிப் பாகுபாடின்றி 500 விளம்பர பலகைகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

3 months ago 26

சென்னை: வடகிழக்கு பருவமழையொட்டி கட்சி பாகுபாடின்றி 500 விளம்பர பலகைகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலையில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார். ஓர் உயிரிழப்பு கூட ஏற்படாத வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், நேற்று மாலையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து முதல் கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் கட்சி பாகுபாடின்றி விளம்பரப் பலகைகள் மற்றும் சுவரொட்டிகள் அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக திருவல்லிக்கேணி, பெல்ஸ் சாலை, அரசு கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனை அருகில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பலகைகள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டது. அதேபோல, அடையாறு மண்டலம், வார்டு-170க்குட்பட்ட அண்ணா பல்கலைக்கழகம் அருகில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பலகைகள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டது. சென்னை முழுவதும் கடந்த 2 நாட்களாக 500க்கும் மேற்பட்ட விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. இந்தப் பணிகள் தொடரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிப்பதற்கான பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். மின்சார வாரியம் சார்பில் சீரமைப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post வடகிழக்கு பருவமழையையொட்டி கட்சிப் பாகுபாடின்றி 500 விளம்பர பலகைகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article