* சிறப்பு செய்தி
‘ஒரு மழைக்கே தாங்காது சென்னை’ என்ற நிலையை தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு முற்றிலுமாக மாற்றி காட்டும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மழைக் காலம் வந்துவிட்டாலே சென்னைவாசிகளுக்கு ஒருவித அச்ச உணர்வு மேலோங்குவது வழக்கம். அந்த அளவுக்கு சிறு மழைக்கே சாலைகளில் வெள்ளம் வழிந்தோடும் காலம் இருந்து வந்தது. இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்காமல் தொடர்ந்து கொண்டே வந்தது. இந்நிலையில், ஆட்சி பொறுப்பேற்ற போது சென்னையில் வெள்ள நீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்தார்.
அதன் எதிரொலியாக சென்னை நகர் முழுவதும் போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நல்ல பலன் கிடைத்தது. இந்த நடவடிக்கையை அரசியல் கடந்து பலரும் பாராட்டினர். ஆனால் பெருமழை வந்த போது சென்னை நகரில் தேங்கிய மழைநீர் வெளியேற முடியாமல் தவித்தது. இதற்கு காரணம், வெள்ள நீர் வெளியேற்றும் பணியில் முக்கிய பங்காற்றக் கூடிய கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய்களில் கரை புரண்டோடிய வெள்ளம் தான். இதனால், இவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள் மூலம் மழைநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கியது. ஆறுகளில் தண்ணீர் குறைந்ததும் தேங்கிய மழைநீர் வேகமாக வடிந்தது. எனவே மழைநீர் வடிகால் திட்டம் சென்னை நகருக்கு மிகப் பெரிய பலனை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் சிறுமழை காலங்களை சாதாரணமாக இந்த மழைநீர் வடிகால்கள் சமாளித்து வருகிறது. ஆனாலும் சில இடங்கள் தாழ்வாக அமைந்துள்ளதால் அங்கிருந்து வெள்ள நீரை வெளியேற்றுவது சவாலானதாக உள்ளது. இதனால் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்ட பின்பு, எங்கெல்லாம் மழை காலங்களில் தண்ணீர் தேங்குகிறது என்பது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
அதன்படி, கடந்த ஆண்டு சென்னையில் 320 இடங்கள் தண்ணீர் தேக்கம் உள்ள இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அதிக மழைப்பொழிவு இருக்கும்போது இந்த இடங்களில் தண்ணீர் வழிந்தோட 3 நாட்கள் வரையில் ஆவதாகவும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற இடங்களில் மழை பாதிப்பை தடுப்பதற்கான நடவடிக்கையை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ளது. அதாவது, தென்மேற்கு பருவமழை கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகமாகவே இருந்தது.
இதை தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை இம்முறை வடதமிழகத்தில் இயல்பைவிட அதிகமாகவும், தென்தமிழகத்தில் இயல்பைவிட குறைவாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் ஆண்டுதோறும் அதிகமான மழைப்பொழிவு ஏற்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு வழக்கத்தை விட 111 சதவீதம் அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. முக்கியமாக தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களில் மழைப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் அந்தந்த மாநிலங்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ்நாடு அதிகப்படியான மழையை எதிர்கொள்ளும் என்றும், அந்த வகையில் தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இம்மாதம் 3வது வாரத்தில் தொடங்க உள்ளது. இந்த முறை எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் பருவமழையை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அப்போது, ‘மழை, வெள்ளத்தால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது. அந்த நோக்கத்தோடு அரசு இயந்திரம் விரைவாக செயல்பட வேண்டும். அதற்கேற்ப தேவையான இயந்திரங்கள் மற்றும் படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்,’ என அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. சென்னையில் தற்போது முக்கிய பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளது. மேலும் மெட்ரோ ரயில் பணிகளால் தடைபட்ட மழைநீர் வடிகால் இணைப்பு பணிகளும் வேகமாக முடிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் இந்த ஆண்டு சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை குறைக்க முடியும் என்றாலும், புறநகர் பகுதிகளில் பருவமழை காலங்களில் வெள்ள நீர் சூழ்வது வாடிக்கையாக உள்ளது. எனவே, சென்னையில் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராகி வருகிறது. இதற்காக 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளதுடன், தங்கள் பகுதிகளுக்கு தேவையாக முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள தாழ்வான பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். நிவாரண முகாம்கள், குடிநீர் வசதி, ஜெனரேட்டர் வசதி, சமையல் கூடங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேவையான இயந்திரங்கள், மோட்டார் பம்புகள், படகுகள் உள்ளிட்ட வெள்ள மீட்பு நடவடிக்கைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வேளச்சேரி, தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம், திருவொற்றியூர், மணலி, தாம்பரம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகள் வழக்கமாக தண்ணீர் தேங்கும் இடங்களாக உள்ளது. அந்த பகுதிகளுக்கு படகுகளை அனுப்பி பொதுமக்கள் மீட்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் தாக்கத்தால் வரலாறு காணாத பெருமழை, பெருவெள்ளம் ஏற்பட்டது. அப்போது மாநகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டது. அப்போது மாநகராட்சி சார்பில் பொதுமக்களை மீட்கவும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லவும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகுகளை கொண்டு செல்ல முடியாத சூழல் நிலவியது.
இதனால் மக்கள் தவிப்புக்குள்ளாகினர். இதுபோன்ற சூழல் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் இதுபோன்ற மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் தயார் நிலையில் படகுகளை நிறுத்தி வைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, பெரு வெள்ளத்தால் சேதம் ஏற்பட்டாலும் மக்களை மீட்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தம் புதிய 36 சிறிய படகுகளை சென்னை மாநகராட்சி வாங்கியுள்ளது. முதல் கட்டமாக, பெருங்குடி பகுதிக்கு 2 படகுகளும் மாதவரம் பகுதிக்கு ஒரு படகும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புழுதிவாக்கத்திற்கும் புதிய படகுகள் வந்திறங்கி உள்ளன.
இதேபோன்று ஒவ்வொரு மண்டலங்களிலும் தாழ்வான பகுதிகள் மற்றும் வெள்ள நீர் வடிய தாமதமாகும் பகுதிகளிலும் இந்த படகுகளை நிறுத்தி வைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இது தவிர, அவசர கால தேவை ஏற்பட்டால் மீனவர்களிடம் இருந்து 80 படகுகளை வாடகைக்கு எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனால் எவ்வளவு பெரிய பெருமழை வந்தாலும் மக்கள் பாதிக்கப்படாத வகையில் அவர்களை மீட்டு தேவையான உதவிகளை செய்ய இந்த படகுகள் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் மக்கள் யாரும் பாதிக்கப்படாத வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள சென்னை மாநராட்சி தயார் நிலையில் உள்ளது. அந்த அளவுக்கு பணிகள் முழு அளவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆபத்தான பகுதிகள், மழைநீர் தேங்கும் பகுதிகள் என தனியாக பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் அதிகாரிகள் குழு சார்பில் தொடர்ந்து கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக கண்காணிப்பு கேமராவில் கண்காணிக்கப்பட்டு தண்ணீர் தேங்கிய பகுதிகள் அனைத்திலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் சென்னையில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை செய்யும் வகையில் அலாரம் பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மழைநீர் தேங்கினாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’ என்றனர்.
* மீட்பு படை வீரர்கள்
கடந்த ஆண்டை போல் மிக கனமழை வந்தாலும் அனைத்து பகுதிகளிலும் மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. அதேநேரம் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தாலும் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளில் இருந்த மக்களை உடனுக்குடன் மீட்கும் வகையில் 36 படகுகளை சென்னை மாநகராட்சி வாங்கியுள்ளது. இந்த படகுகள் அனைத்தும் தாழ்வான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பாதிக்கப்படும் மக்களை மீட்கும் பணியில் இனி எந்த வித தொய்வும் ஏற்பட வாய்ப்பில்லை, என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post வடகிழக்கு பருவமழையை சந்திக்க சென்னை மாநகராட்சி தயார் தாழ்வான பகுதிகளுக்கு 36 படகுகள் வந்தாச்சு.. தண்ணீர் தேங்கும் பகுதிகளில் அலாரம் பொருத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.