வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் மாதவரம் ரெட்டேரியில் உபரிநீர் கால்வாய் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

4 weeks ago 4

புழல்: புழல் அடுத்த எம்ஜிஆர் நகர் பகுதியில் மாதவரம் ரெட்டேரி அமைந்துள்ளது. இந்த, ஏரியை சுற்றுலாதலமாக மற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்து, அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 32 மில்லியன் கனஅடி. கடந்த இரண்டு ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால், ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து அருகிலுள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள ஒரே ஒரு கலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், தண்ணீர் அதிகரித்ததால் மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், புழல் அருகே அறிஞர் அண்ணா நகர், ராகவேந்திரா அெவன்யூ, லிங்கம் தெரு ஆகிய பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தெருக்களில் மழைநீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதனால், கொசு தொல்லை மட்டுமின்றி பாம்புகள், விஷ பூச்சிகள் மற்றும் தண்ணீரில் கழிவுநீர் கலந்து பல்வேறு தொற்று நோய் ஏற்படும் அவலநிலை உள்ளது. இதற்கு, இப்பகுதியில் நிரந்தர கால்வாய் இல்லாததே முக்கிய காரணமாக உள்ளது. தற்போது, சில தினங்களாக பெய்து வரும் மழையால் அப்பகுதி மக்கள் பாதிப்புள்ளாகி வரும் நிலையில் மாதவரம் மண்டலம், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய்களை இரண்டு இடங்களில் உடைத்து ரெட்டேரியில் இருந்து செல்லும் உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

அங்கு, கால்வாய் அமைத்தால் உபரிநீர் அந்த வழியாக செல்லும். எனவே, இனிவரும் மழை காலங்களில் ரெட்டேரி முழு கொள்ளளவு நிரம்பி கலங்கள் வழியாகவும், மதகுகள் வழியாகவும் வெளியேறும் தண்ணீர், புதிதாக கட்டப்படவுள்ள கால்வாயில் செல்ல வழிவகை செய்ய வேண்டும். இதனால் அறிஞர் அண்ணா நகர், ராகவேந்திரா அவென்யூ, லிங்கம் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் மழைநீரால் பாதிப்படைவது தவிர்க்கப்படும் என தமிழ்நாடு அரசுக்கு, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

 

The post வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் மாதவரம் ரெட்டேரியில் உபரிநீர் கால்வாய் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article