பொன்னேரி: வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று பொன்னேரி நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம், மன்ற வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொன்னேரி நகராட்சிமன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் கோபிநாத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வடகிழக்கு பருவமழைக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும், திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள் தங்கு தடையின்றி நடைபெற வேண்டும், குப்பைகள் தேங்காமல் தினந்தோறும் அப்புறப்படுத்த வேண்டும், பொது சுகாதார பிரிவின் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்கும்பொருட்டு கொசு மருந்து அடிக்க வேண்டும், பொது சுகாதார பணிக்கு தேவையான கிருமி நாசிகள், புகை போக்கி, கொசு ஒழிப்பு மருந்துகள், பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்புத்தூள், பினாயில் உள்ளிட்ட பொருட்களை தயாராக வைக்க வேண்டும்.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க சாலையோரங்களில் மண் கால்வாய் அமைக்க வேண்டும், வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள், தங்கள் பகுதிகளில் அடிப்படை தேவைகள் குறித்த கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இதில், கவுன்சிலர்கள் வசந்தா செங்கல்வராயன், பரிதா ஜெகன், பத்மா சீனிவாசன், சாமுண்டீஸ்வரி யுவராஜ், மோகனா காந்தாராவ், வேலா கதிரவன், யாக்கோப், அஸ்ரப் முகமது சகில், நீலகண்டன், மணிமேகலை சிலம்பரசன், உமாபதி, நல்லசிவம், ராஜேந்திரன், தனுஷா தமிழ் குடிமகன், கவிதா விஜய், செந்தில் அருண், மணிமேகலை வெங்கடேசன், சுரேஷ், சரண்யா ஆனந்த், அபிராமி, விஜயகுமார், கோவிந்தராஜ் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் நகராட்சி ஊழியர் சுந்தர் நன்றி கூறினார்.
The post வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்: பொன்னேரி நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.