வடகம், வத்தலில் கலரிங் பொருட்கள் கலப்பு: அதிகாரிகள் எச்சரிக்கை

1 week ago 2

கோவை, நவ.8: ேகாவை மாவட்டத்தில் வடகம், வத்தல் உள்ளிட்ட எண்ணெய் மூலமாக பொரிக்கப்படும் உணவு பொருட்களில் கலர் கூட்டும் வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வத்தல், வடகம், பொறிக்கும் அப்பள வகையான உணவு பொருட்களில் சிவப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்ச் போன்ற நிறமிகள் வேதிப்பொருட்கள் கலவையுடன் சேர்க்கப்பட்டு மக்களை கவரும் வகையிலான நிறங்களுடன் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகம், குடல், வத்தல் தயாரிப்பு கூடங்களில் செயற்கை நிறங்கள் அதிகளவு கலக்கப்படுவதாக தெரிகிறது.

இந்த தயாரிப்பு கூடங்களில் இருந்து உணவு மாதிரி ஆய்விற்கு எடுத்து சோதனை நடத்தவேண்டும் என்றும், கலரிங் ஏஜன்ட் பயன்படுத்தி உணவு பொருட்கள் தயாரிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற தரமற்ற உணவுகளை விற்பனைக்கு வைக்க கூடாது என்றும் நுகர்வோர் அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளனர். நகரில் உள்ள பல்வேறு மார்க்கெட் மற்றும் கடைகளில் வெளிப்படையாகவே இந்த கலப்பட உணவு பொருட்கள் விற்பனை செய்தாலும் பெயரளவிற்கு கூட நடவடிக்கை எடுப்பது இல்லை என்றும், மக்களை வாங்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கலரிங் பொருட்களை கலப்படம் செய்து விற்பதால் புற்றுநோய் போன்ற வியாதிகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் கூறுகையில்,‘‘வத்தல், வடகம் மட்டுமின்றி அல்வாக்களிலும் நிறம் கூட்டி விற்பனை செய்வதாக புகார்கள் வந்துள்ளது. கலரிங் பொருட்கள் வயிறு, குடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தயாரிப்பு கூடம், வியாபாரிகளுக்கு கலர் கூட்டிய பொருட்களை விற்க கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கலர் கூட்டிய பொருட்களை விற்பனைக்கு விற்க கூடாது என தடை விதித்திருக்கிறோம். செயற்கை நிறம் கலந்த உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழிக்கும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.

The post வடகம், வத்தலில் கலரிங் பொருட்கள் கலப்பு: அதிகாரிகள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article