புதுடெல்லி,
வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு ஒரு "தேசிய அவசரநிலை" என்று வலியுறுத்தியுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சக எம்.பி.க்கள் ஒன்று கூடி இதைப்பற்றி விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, "வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு பிரச்சினை தேசிய அவசர நிலையாகும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதால் பொது சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பேரழிவானது எண்ணற்ற உயிர்களை அழிக்கிறது. நம்மை சுற்றியுள்ள ஏழைகள் அனைவரும், அவர்களைச் சூழ்ந்துள்ள நச்சுக்காற்றில் இருந்து வெளிவர முடியாமல் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
சுத்தமான காற்றுக்காக குடும்பங்கள் தவிக்கின்றன, குழந்தைகள் நோய்வாய்படுகிறார்கள், கோடி கணக்காண உயிரினங்கள் அழிந்து வருகின்றன. சுற்றுலாத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினையால் நமது நாட்டுக்கான உலகளாவிய நற்பெயர் சிதைந்துள்ளது.
நூறு கிலோமீட்டருக்கு காற்று மாசு பரவியுள்ளது. காற்று மாசை சுத்தம் செய்வதற்கு முக்கிய மாற்றங்கள் மற்றும் உறுதியான நடவடிக்கைகள் அரசாங்கம், நிறுவனங்கள், நிபுணர்கள் மற்றும் குடிமக்களிடமிருந்து தேவைப்படுகிறது. இந்த சமயத்தில் நாம் ஒன்றிணைந்து கடமையாற்ற வேண்டும். இதை அரசியல் பழிசுமத்தும் விளையாட்டாக பார்க்கக்கூடாது. இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றம் கூடுகிறது. நமக்கு ஏற்பட்டுள்ள கண் எரிச்சல், தொண்டை வலி பிரச்சினைகள் குறித்து எம்.பி.க்களுக்கு நினைவூட்டப்படும். காற்று மாசு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து நாடாளுமன்றத்தில் அனைவருக்காகவும் ஆலோசிக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.