
சென்னை,
இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாகவும், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் உலா வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் 'வேட்டையன்'. இந்த படம் கடந்த 10-ந் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'ஜெய் பீம்' படத்திற்குப் பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அதே சமயம் 33 வருடங்களுக்கு முன்பாக 'ஹம்' என்ற இந்தி படத்தில் இணைந்திருந்த ரஜினி மற்றும் அமிதாப் கூட்டணி, மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீது எதிர்ப்பு அதிகமானது. இதில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர். இந்த படம் கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் குறித்தும் போலி என்கவுண்டர் குறித்தும் பேசுகிறது.

இந்தப் படம் ஆயுத பூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் வெளியான முதல் நாள் உலக அளவில் ரூ.65 கோடியை வசூலித்து. இப்படம் இதுவரை உலக அளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழ் நாட்டில் மட்டும் ரூ.80 வசூலித்துள்ளது. இன்னும் சில நாட்களில் தமிழ் நாட்டில் ரூ.100 கோடியை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.