வசிஷ்டர் வணங்கிய வாயுமைந்தன்

3 weeks ago 7

கேரள மாநில ஆலத்தியூரில் உள்ளது அனுமார் திருக்கோயில். இத்திருக்கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வசிஷ்டமுனிவரால் சிருஷ்டிக்கப்பட்டது. கருவறையில் ராமபிரான் சீதாபிராட்டி இன்றி காட்சியளிக்கிறார். சீதையைத் தேடிச் செல்லுமாறு அனுமனிடம் சீதையின் அங்க அடையாளங்களை ராமர் சொல்ல அதை கூர்ந்து கேட்கும் திருக்கோலத்தில் அனுமன் இங்கே தரிசனமளிக்கிறார்.

ஆனந்த அனுமன்

கும்பகோணம்-பூந்தோட்டம் சாலையில் மருதவஞ்சேரியிலிருந்து வடக்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது மானந்தகுடி திருத்தலம். இங்கு அருள்புரியும் மங்கள ஆஞ்சநேயர் வரப்பிரசாதி. ஒருமுறை தனக்கு ஒரு முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்க, காமாட்சி சமேத ஏகாம்பரநாதரை அனுமன் இத்தலத்தில் வழிபட்டார். அதனால் தனக்கு சாப விமோசனம் ஏற்பட, அனுமன் மகிழ்ந்து ஆனந்தக் கூத்தாடினார். எனவே இத்தலம் இனுமானந்த குடியாகி, காலப்போக்கில் மருவி, மானந்தகுடி என்றானது. இத்தலத்தில் நவகிரகங்கள் தம்பதி சமேதராய் அருள்கின்றனர். புத்திர பாக்கியத் தடை, திருமணத் தடை நீங்க இந்த அனுமன் சந்நதியில் மட்டைத் தேங்காய் கட்டி வழிபட அவை நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

வந்தார் அனுமன்

மத்திய பிரதேசம் – ரத்லம் பகுதியில் கலிகா மாதா கோயில் இருக்கிறது. இங்கே ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் அங்கே ராமாயண உபந்யாசம் நடைபெற்றது. சொற்பொழிவாளரும் சரி, கேட்டுக் கொண்டிருந்தவர்களும் சரி, பக்தி மேலீட்டுடன் மெய்மறந்திருந்தார்கள். அப்போது அங்கே வந்தார் அனுமன். ஆமாம், லாங்கூர் இனக் குரங்கு தான் அனுமனாக வந்தார். வந்த அவர், பாடுவோர் முன் சற்று நேரம் அமர்ந்தார்; பாடலை ரசித்தார்.

பிறகு சொற்பொழிவாளர் அருகே வந்து அவரது மைக்கை கையால் பற்றினார். உபந்யாசகர், அனுமனின் தலைமீது கைவைத்து ஆசிர்வாதம் அளித்தார். உடனே அனுமனும் தன் வலது கரத்தால் அவரை பதிலுக்கு ஆசிர்வதித்தார். அதன்பின், அருகிலிருந்த ராமர் பட்டாபிஷேகப் படத்துக்கு முன் வந்து, அமர்ந்தார் அனுமன், பூக்களை எடுத்து அந்தப் படத்திற்கு அர்ச்சனையாக பொழிந்தார். பிறகு சென்று விட்டார். இதில் குறிப்பிடத்தக்க அதிசயம் என்னவென்றால், ராமர் படத்தில் ராமாயண அனுமன் எந்த நிலையில் அமர்ந்திருந்தாரோ, அதேபோல இந்த லாங்கூர் அனுமனும் அமர்ந்திருந்ததுதான்!

ஆயிரம் கண் – மயில்தோகை

படைப்புத் தொழிலின் போது இறைவன் (பாதி திறந்த கண்களுடன்) யோக நிலையில் நின்று அதைச் செய்கிறான். அழிக்கும் போது நெற்றிக்கண் வழியால் அழிக்கிறான். ஆனால் காத்தல் தொழிலின் போதோ ஆயிரமாயிரம் கண்களால் உயிர்களைக் கண்டு அவை ஒவ்வொன்றையும் தனித்தனியே உற்றுநோக்கி அவற்றிற்கு வேண்டியதைச் செய்து காத்தருளுகிறார். அதனால் அவனை ஆயிரங்கண்ணோன் என அழைக்கிறோம். அவன் ஆயிரமாயிரம் கண்களை உடையவன் என வேதநூல்கள் துதிக்கின்றன. மயில் ஆயிரங்கண்ணுடைய பறவையாக இருப்பதால் அவன் மயிலாக உருவகிக்கப்பட்டு, காத்தல் தொழிலை நடத்த ஆடும் ஆட்டம் கௌரிதாண்டவம் எனப்படுகிறது. காத்தல் தொழிலை நடத்தும்போது மயில்தோகை ஏந்தியவனாகச் சித்திரிக்கப்படுகின்றார்.

அமர்ந்த ஆஞ்சநேயர்

மதுரை அழகர் கோயில் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு முத்தப்ப சுவாமி திருக்கோயிலில் 41 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமர்ந்த நிலையிலுள்ளது. இதுதான் ஆசியாவிலேயே மிகப் பெரிய ஆஞ்சநேயர் சிலை என்கிறார்கள். செம்பு, செங்கல் கொண்டு 6 மாதங்களில் உருவானதாம் இந்த ஆஞ்சநேயர் சிலை.

ஓலைச்சுவடி படிக்கும் அனுமன்!

வேலூர் திருவண்ணாமலைக்கு இடையே சந்தவாசல் என்ற ஊரிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ள ராமர் கோயிலில் ராமர் யோக நிலையில் சீதாபிராட்டி, லட்சுமணன் சகிதம் அமர்ந்துள்ளார். எதிரே அனுமன் ஓலைச்சுவடியைக் கையில் வைத்து படிப்பது போல் உள்ளார்.

மஞ்சள் அரைத்து வழிபடும் ஆஞ்சநேயர்

புதுக்கோட்டை அறந்தாங்கியிலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள ‘அழியாநிலை’ எனுமிடத்தில் உள்ளது விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில். இங்கு திருமணத் தடை உள்ள பெண்கள் கோயிலிலுள்ள அம்மியில் மஞ்சள் அரைத்து அதனை ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தால் திருமணத்தடை விலகி நல்ல வரன் அமையும் என்கிறார்கள்.

ஜெயசெல்வி

The post வசிஷ்டர் வணங்கிய வாயுமைந்தன் appeared first on Dinakaran.

Read Entire Article