வேலூர், அக்.1: முதலீடு செய்து அதிக லாபம் தருவதாக கூறி வங்கி ஊழியருக்கு வாட்ஸ் அப்பில் லிங்க் அனுப்பி ₹5.72 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக கொடுத்த புகாரின்பேரில் வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் ஓட்டேரியை சேர்ந்த 30 வயது நபர் தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவரது செல்போன் எண்ணை வாட்ஸ் ஆப் எண் ‘எக்ஸ்புளோர் தி ரோட் டூ வெல்த்கே2’ என்ற குழுவில் இணைத்துள்ளனர். இக்குழுவில் உள்ள சிலர் ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் அடைந்ததாக தகவல் பதிவிட்டு ஆசையை தூண்டியுள்ளனர். அதன்பேரில், வங்கி ஊழியர் குழுவில் மெசேஜ் பதிவிட்ட நபர்களை தொடர்பு கொண்டு பேசியதோடு, அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் ‘பர்ஸ்ட் மார்க்’ என்ற ஆப்பினை பதிவிறக்கம் செய்தார். இந்த ஆப்பில் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி முதல் கடந்த 24ம் தேதி வரை பல்வேறு தவணையில், ₹5 லட்சத்து 72 ஆயிரத்து 37 முதலீடும் செய்துள்ளார். அப்போது அந்த ஆப்பில் வங்கி ஊழியருக்கு ₹10 லட்சம் இருப்பது போல் காட்டி உள்ளனர்.
இதையடுத்து அந்த ஆப் மூலமாக வங்கி ஊழியர் பணத்தை திரும்ப எடுக்க முயன்றபோது, பணம் எடுக்க முடியவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் வேலூர் எஸ்பி மதிவாணனிடம் நேற்று புகார் அளித்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு எஸ்பி உத்தரவிட்டார். தொடர்ந்து, வேலூர் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘இதுபோன்று வாட்ஸ்ஆப், டெலிகிராம் மற்றும் இதர சமூக ஊடங்களில் முதலீடு, டாஸ்க், முதலீடு செய்து அதிக லாபம் ஆன்லைன் பார்ட் டைம் வேலை தொடர்பாக வரும் அறிவிப்புகளை நம்பி பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம். அவ்வாறு ஏதாவது தகவல் வந்தால் உடனடியாக அருகே உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் செய்ய வேண்டும். அதனால் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும்’ என்றனர்.
The post வங்கி ஊழியருக்கு வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி ₹5.72 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை முதலீடு செய்து அதிக லாபம் தருவதாக கூறி appeared first on Dinakaran.