ஆவடி: பாக்கம் ஊராட்சி, பெரியபாளையம் நெடுஞ்சாலையில் 2013 முதல் யூகோ வங்கி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கட்டிடம் பழுதடைந்துள்ளதால், திருநின்றவூர், கிருஷ்ணாபுரம் முதல் குறுக்கு தெருவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக, இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 6000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
குறிப்பாக, பாக்கம் சுற்றுவட்டார பகுதியில் முதியோர் மற்றும் பெண்கள் 5 கி.மீ. சென்று வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முன் அறிவிப்பின்றி, வங்கி இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து, பாக்கம் வட்டார வியாபாரிகள் சங்கம் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பாக்கம் சந்தை பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருநின்றவூர் போலீசார் 40 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிடம் பழுதடைந்துள்ளதால், ரிசர்வ் வங்கி விதிப்படி 5 கி.மீ. தூரம் வரை வங்கியை இடமாற்றம் செய்யலாம் என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வங்கி இட மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.