கொல்கத்தா,
வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு வீழ்ச்சியடைந்தது. அந்நாட்டில் இடைக்கால அரசு அமைந்தது. இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, வங்காளதேசத்தில் முகமது யூனிஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது முதல் அந்நாட்டில் இந்து மதத்தினர் உள்பட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்து மதத்தினர் மற்றும் அவர்களது வழிபாட்டு தலங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், வங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு மத்திய அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவிற்கு வர விரும்புபவர்களை ( வங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மையினர்) நாட்டிற்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்காளதேச தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக ஒருசில போலி வீடியோக்களும் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது' என்றார்.